×

ரூ.100 ரூபாய் கூலி பிரச்னையில் 3வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கட்டிட தொழிலாளி படு கொலை: வேளச்சேரியில் பயங்கரம்

வேளச்சேரி: வேளச்சேரியில் 3வது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கட்டிட தொழிலாளி கொடூரமாக கொல்லப்பட்டார். 100 ரூபாய் கூலி பிரச்னையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகர் 10வது தெருவில் தனியார் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்தன்(22) என்பவர் சென்ட்ரிங் வேலை செய்தார். இந்த நிலையில், மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த ஆனந்தன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் வேளச்சேரி போலீசார் சென்று ஆனந்தன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து சக தொழிலாளர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (25), பிரசாந்த் (25), கொத்தனார் சீனிவாசன் (25) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், சென்னை சிஐடி நகரில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அங்குதான் உயிரிழந்த ஆனந்தன் வேலை செய்துள்ளார். அப்போது அவருடன் சக்திவேல், பிரசாந்த் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர். மேஸ்திரி   ஆறுமுகம், ஆனந்தனை விட சக்திவேல், பிரசாந்த் ஆகியோருக்கு கூடுதலாக ரூ.100 ரூபாய்  கூலி கொடுத்துள்ளார்.

இதன்காரணமாக அவர்கள் இடையே கடந்த ஒரு வாரமாக பிரச்னை இருந்துள்ளது. இருவரும்   தண்டீஸ்வரன் நகரில் தங்கி உள்ள கொத்தனார் சீனிவாசன்(25)வுடன் சேர்ந்து மது குடிப்பதற்காக ஆனந்தனை   வேளச்சேரி, தண்டீஸ்வரன் நகருக்கு  வந்துள்ளார். அங்கு 4 பேரும் சேர்ந்து கட்டிடத்தின் 3வது மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். ஆனந்தனுக்கு போதை  ஏறியதும் பக்கத்தில் உள்ள தென்னை மரத்தில் இருந்து இளநீர் பறிக்க சொல்லியுள்ளார்.

அவர் தென்னை மரத்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தபோது மூன்று பேரும் சேர்ந்து ஆனந்தனை மாடியில் இருந்து  கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில் ஆனந்தன் உயிரிழந்துள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதையடுத்து சக்திவேல், பிரசாந்த், சீனிவாசன் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Velachery , Construction worker killed after being thrown from 3rd floor over Rs 100 wage dispute: Panic in Velachery
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...