தலைவர் பதவிக்கு அசோக் கெலாட் போட்டியிடும் நிலையில் 92 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா: சச்சின் பைலட்டுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ராஜஸ்தானில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் சிக்கல்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 92 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் வரும் அக்டோபர் 17ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வரான அசோக் கெலாட் மற்றும் திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் ஆகியோருக்கு இடையில் போட்டி நிலவி வருகிறது. அசோக் கெலாட்டுக்கு காங்கிரஸ் தலைமையின் ஆதரவு அதிகமாக இருப்பதால், அவர் தான் புதிய தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு அசோக் கெலாட் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், ‘ஒரு பதவிக்கு ஒரு நபர்’ என்ற தீர்மானத்தின் அடிப்படையில் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டியிருக்கும். அதனால் ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2018ல் நடந்த ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்கு கடினமாக உழைத்த ராகுல்காந்தியின் ஆதரவாளர் சச்சின் பைலட்டிற்கு முதல்வர் பதவியை வழங்க கட்சித் தலைமை முடிவு செய்தது. ஆனால் திடீர் திருப்பமாக முதல்வர் பதவியை மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு காங்கிரஸ் தலைமை கொடுத்தது.

இதனால் அசோக் கெலாட்டுடனும், கட்சித் தலைமையுடனும் சச்சின் பைலட் அதிருப்தியில் இருந்தார். இந்த அதிருப்தியைப் பயன்படுத்தி, சச்சின் பைலட்டை தன் பக்கம் கொண்டு வர பாஜகவும் முயற்சித்தது. இருந்தும் அது பலிக்கவில்ைல. தொடர்ந்து சச்சின் பைலட்டை காங்கிரஸ் தலைமை சமாதானப்படுத்தி வைத்திருந்தது. தற்போது அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக போட்டியிட உள்ளதால், அவரது முதல்வர் பதவியை சச்சின் பைலட்டுக்கு வழங்க ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்றிரவு ஜெய்ப்பூரில் நடந்தது. அந்த கூட்டத்தில் சச்சின் பைலட் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.

ஆனால், சச்சின்  பைலட்டுக்கு எதிராக அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியதால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடித்தது. ‘கடந்த 2020ம் ஆண்டு ராஜஸ்தான் அரசுக்கு எதிராக 18 ஆதரவு எம்எல்ஏக்களுடன் போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டுக்கு முதல்வர் பதவியை வழங்கக் கூடாது’ என அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ‘அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக இருந்த எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே 92 எம்எல்ஏக்கள் நேற்றிரவு இரண்டு பஸ்களை பிடித்து, சபாநாயகரை சந்தித்து தங்களது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தனர். சச்சின் பைலட்டை முதல்வராக்க கட்சித் தலைமை திட்டமிட்டதால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரே இரவில் நடந்த மாற்றங்களால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைமை, அடுத்த கட்ட யோசனைகளில் இறங்கியுள்ளது. ராஜஸ்தானின் தற்போதைய விவகாரம் குறித்து தேசிய ெபாதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் அசோக் கெலாட்டிடம் ஆலோசனை நடத்தினர்.

சச்சின் பைலட்டுக்கு பெரும்பாலான  எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அசோக் கெலாட்டின் ஆதரவாளரான சட்டமன்ற சபாநாயகர் சிபி ஜோஷிக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் உள்ளனர். 200 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 92 பேர் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: