×

போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்கள் மீது தொடரும் நடவடிக்கை-நீர்ப்பிடிப்பு பகுதி அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

போடி : தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. பொதுவாக நீர்நிலை ஆக்கிரமிப்பு மீட்பு பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமலும், தற்போது அதிரடியாக நடந்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது.

அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள், குளங்கள், நீர்வரத்து கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி உள்ளது. அனைத்து நீர்நிலைகளையும் முறையாக தூர்வாரி முறையாக கரைகளை பலப்படுத்தி தேனி மாவட்டத்தில் எப்பொழுதும் குடிநீர் பஞ்சம் வராமல் பாதுகாக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் தூர்வாரப்படாத கண்மாய்களிலும் குடிமராமத்து பணிகள் துவங்க வேண்டும்.அதுபோல் கடந்த ஆட்சியின்போது, தனிநபர் ஆக்கிரமிப்பால் சின்னாபின்னமான கண்மாய்களை கவனத்தில் கொள்ள வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளை காக்க சிறப்பான முறையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகிறது. போடி அருகே உள்ள கூழையனூர் கிராமத்தில், முல்லைப் பெரியார் பாசனத்தில் இருபோகமும், போடி கொட்டகுடி ஆற்றுப்பாசனத்தில் ஒரு போகம் நெல் சாகுபடியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கூழையனூரில் இருந்து கிழக்கு பகுதி முல்லைப் பெரியாறு சாலை கருப்பசாமி கோயில் பகுதியில் 22 ஏக்கர் அளவில் கருவேலங்குளம், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

இந்த குளத்தினை சிலர் 9 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து மாட்டுக் கொட்டகம், வைக்கோல் போர், மண்புழு தயாரிக்கும் கட்டிடங்களை அமைத்தனர். இதுகுறித்து வந்த புகாரின்பேரில் போடி வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கருவேளங்குளத்தினை ஆய்வு செய்தனர்.இந்நிலையில்
அதில் 20க்கு மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள விவரத்தை சேகரித்து, உடனே அவர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பி காலி செய்யும்படி எச்சரித்தனர்.

ஆனால் அவர்கள் ஆக்கிரமிப்பு பகுதி களை காலி செய்யாமல் காலம் கடத்தினர், நேற்று இது குறித்து போடி தாசில் தார் செந்தில் முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கதிர்வேலன் ஆகியோர் தலைமையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு அங்கிருந்த ஆக்கிரப்புகள் அனைத்தையும் இடித்து அகற்றி மண்ணைச் சுரண்டி மேடுகளை கரைத்து சமப்படுத்தி குளத்தோடு சேர்க்கப்பட்டு நடவடிக்கை எடுத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நீர்நிலை ஆர்வலர்கள் கூறுகையில் ‘‘தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான குளம், ஏரி, கண்மாய்கள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தேங்கும் பாசனநீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளன. இந்த கண்மாய்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களை மீட்க வேண்டும் என விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினர். அதேபோல பல கண்மாய்களில் முறையான குடிமராமத்து பணிகளும் நடக்கவில்லை என புகார்கள் எழுந்தன. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே, பொதுப்பணிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு கண்மாய்கள் மீட்கப்பட்டுள்ளது.

 தமிழகம் முழுவதும் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கண்மாய்களை மீட்க தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு ெகாண்டிருக்கிறது. ஒவ்வொரு திட்டத்திலும், செயல்பாடுகளிலும், அதிரடி நடவடிக்கைகளிலும், இது அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு என்பதை மீண்டும் அழுத்தமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. எனவே, தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் முறையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ’’ என்றனர்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்: சோத்துப்பாறை அணையே சாட்சி

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் முறையாக தூர்வாரப்படாத காரணத்தினால், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மணல் அதிகளவில் சேர்ந்துள்ளது. இதனால், அணையில் அதிகளவில் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயத்திற்கு முக்கியத்தும் அளித்து வரும் தமிழக அரசு, அணையை தூர்வாரினால் அதிகளவில் நீரை தேக்க முடியும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள உயரமான அணைகளில் ஒன்றாக சோத்துப்பாறை அணை இருக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், கடந்த அதிமுக ஆட்சியில் முக்கியமான இந்த அணையே கண்டுகொள்ளப்படவில்லை. அதனால்ல அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி மிகவும் குறைந்த அளமாக மாறியது.இந்த அணையில் இருந்து வரும் தண்ணீரை நம்பியே, இப்பகுதியில் நெல், கரும்பு, மா, தென்னை உள்ளிட்ட விவசாயங்கள் நடந்து வருகிறது. ஆனால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மண் தேங்கியிருப்பதால், அதிகளவில் மழைநீரை தேக்க முடியாத நிலை நீடிக்கிறது.

வருடம் முழுவதும் பெரியகுளம் பகுதி மக்களுக்காக இந்த அணையில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றது. மேலும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுவதால் இந்த நீர்ப்பிடிப்பு பகுதியை விரிவுபடுத்துவதற்கான வேலைகளை தமிழக அரசு விரைந்து செய்து கொடுத்தால், இப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் பயன்படுவார்கள், என்றார்.

Tags : Bodi ,Polam ,Chinnamanur ,Antibati , Bodi: In Theni district, farmers welfare projects are ongoing in Bodi, Kampam, Chinnamanur, Antipatti etc.
× RELATED காட்டுமாடு முட்டி விவசாயி படுகாயம்