விடுமுறை நாளான நேற்று சாத்தனூர் அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தண்டராம்பட்டு : விடுமுறை நாளான நேற்று சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு சுற்றுலா தலமாக சாத்தனூர் அணை உள்ளது. மிக பிரமாண்டமான பரப்பளவில், இயற்கை செழுமைமிக்க மலை பகுதியில் அமைந்துள்ள இந்த அணை பொன் விழா கண்ட சிறப்புக்குரியது. இங்கு, ஆயிரக்கணக்கான சினிமா படப்பிடிப்புகள் நடந்துள்ளன.

எழில் நிறைந்த மலர் பூங்காக்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், படகு சவாரி, மீன் கண்காட்சி, முதலை பண்ணை என சுற்றுலா பயணிகளை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ளன.

 எனவே, விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள், சாத்தனூர் அணைக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.

இந்நிலையில், விடுமுறை தினமான நேற்று சாத்தனூர் அணையை சுற்றி பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள ஆதாம் ஏவாள் புங்கா, டைனோசர் பார்க், படகு குளம், வீரமங்கை பார்க், ராக்கெட் பார்க், செயற்கை நீரூற்று, முயல் கூண்டு, யானை பூங்கா ஆகியவற்றை ஆர்வமுடன் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

மேலும், 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் நேற்று மாலை 3 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 114.55 அடியாக உள்ளது. அணையில் இருந்து ஏரிகளுக்கு இடது மற்றும் வலது புற கால்வாய்கள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதனால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: