×

பேரறிவாளனைப் போல தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் மனு: ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி : ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனைப் போல தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது பல்வேறு தரப்பினரின் கோரிக்கை.

31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் கடந்த 2016-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த மார்ச் மாதம் ஜாமின் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மே 18-ம் தேதி சிறப்பு தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் தமக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவித்தது. இத்தீர்ப்பின், அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியவர்கள் தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அம்சங்களை சுட்டிக்காட்டினர். மேலும், இடைக்காலமாக பேரறிவாளனை போல தங்களுக்கும் ஜாமின் வழங்க கோரியிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் பி.ஆர்.காவாய், பி.வி.நாகரத்னா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவர் சார்பிலும் ஆஜரான வழக்கறிஞர் 2 பேரும் 31 ஆண்டுகள் சிறையில் இருக்கிறார்கள் எனவும், இந்த வழக்கில் சம்பத்தப்பட்ட பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து இருக்கிறது.

அதேபோன்று, தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை தங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கோரிக்கைகளை ஏற்று கொண்ட நீதிபதிகள் ஒன்றிய அரசு மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசு தங்களது பதில் மனுவை தாக்கல் செய்ததற்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என தெரிவித்துள்ளது.


Tags : Nalini ,Ravichandran ,Supreme Court ,Union ,Tamil Nadu government , appeal, acquit, request, nalini, ravichandran, petition, union, tamilnadu, government, notice, supreme court, order
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...