கன்னியாகுமரி : மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று காலை ஏராளமானோர் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடி, முன்னோருக்கு பலி தர்ப்பணம் செய்தனர்.
இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலையிலேயே எழுந்து கடல், நதி, ஆறு உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி முன்னோருக்கு பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாத மகாளய அமாவாசை நேற்று வந்தது.
இதையொட்டி கன்னியாகுமரியில் முக்கடலும் ஒன்றுசேரும் திரிவேணி சங்கமத்தில் அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.கடலில் நீராடிவிட்டு கடற்கரையில் அமர்ந்திருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர். பூஜை செய்த பச்சரிசி, எள், பூக்கள், தர்ப்பை புல் போன்றவற்றை வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோயில், பகவதி அம்மன் கோயில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், ரயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோயில், விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கரை தீர்த்த காசி விஸ்வநாதர் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் நேற்று அதிகாலை சுமார் 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு நிர்மால்ய பூஜை, விஸ்வரூப தரிசனம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உஷ பூஜை, உச்சிகால பூஜை, பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி, அன்னதானம் நடந்தது.
மாலையில் சாயராட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோயிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம்வரும் நிகழ்ச்சி, தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாரதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் செயல் அலுவலர் ராஜேந்திரன், கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.