×

மன்னர் மூலம்திருநாள் பிறந்தநாள், பொறியாளர் மிஞ்சின் நினைவுநாள் பேச்சிப்பாறை அணையில் விவசாயிகள் மரியாதை

குலசேகரம் :  பேச்சிப்பாறை அணை உருவாக காரணமான பொறியாளர் அலெக்சாண்டர் மிஞ்சின் நினைவுதினம் மற்றும் மன்னர் மூலம் திருநாள் பிறந்தநாளையொட்டி நேற்று அவர்களுக்கு விவசாய அமைப்பினர் மற்றும் அரசியல் அமைப்பினர் மரியாதை செலுத்தினர். குமரி மாவட்டத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கட்டப்பட்ட பேச்சிப்பாறை அணையானது 48 அடி கொள்ளளவும் 100 சதுர மைல் பரப்பும் கொண்ட நீர்பிடிப்பு பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த அணை கட்டுமான பணி 1897ல் தொடங்கப்பட்டு 1906ல் நிறைவடைந்தது.

இது மூலம்திருநாள் மன்னர் ஆட்சி காலத்தில் ஆங்கில பொறியாளரான அலெக்சாண்டர் மிஞ்சின் என்பவரின் முயற்சியால் கட்டப்பட்டது. இவரது திறமையால் கரடு முரடான நில அமைப்புக்கொண்ட குமரி மாவட்டத்தில் எல்லா பகுதியிலும் பாசனக்கால்வாய்கள் செல்வதற்கு திட்டம் வடிவமைக்கப்பட்டது. இங்கிலாந்தில் 1868ல் பிறந்த இவர் 1913ல் மறைந்தார். இவரது சேவையை பாராட்டி அவரது உடல் மன்னரின் உத்தரவுப்படி பேச்சிப்பாறை அணையின் கரையோரம் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இவரது 109வது நினைவு தினத்தை முன்னிட்டு விவசாய அமைப்பினர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, பாசனசபைகளின் கூட்டமைப்புத் தலைவர் புலவர் செல்லப்பா, வேளாண் உற்பத்திக்குழு பொறுப்பாளர்கள் ஹென்றி, செண்பகசேகரபிள்ளை, பாசன சங்க நிர்வாகிகள் தாணுபிள்ளை, முருகேச பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர். மாலை நாம் தமிழர் கட்சி சார்பில் ஏராளமானோர் அங்கு வந்து மரியாதை செலுத்தி உறுதி மொழி எடுத்தனர்.

இதுபோன்று அணை உருவாக்கிய மன்னர் மூலம் திருநாள் 165வது பிறந்த தினம் நேற்று கொண்டாப்பட்டது. இதையொட்டி அவரது உருவப்படத்திற்கும் விவசாய அமைப்பினர் மரியாதை செலுத்தினர். மேலும் அணை பகுதியில் இந்து அமைப்புகள் சார்பிலும் மன்னர் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் மாவட்டதலைவர் ராஜேந்திரன், இந்து முன்னணி கோட்டச்செயலாளர் கண்ணன், திருவட்டார் ஒன்றிய தலைவர் சதீஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pachiparai Dam ,King ,Engineer ,Minchin , Kulasekaram: Commemoration of Engineer Alexander Minch, who was responsible for the construction of Pachiparai Dam and Tirunal birthday by King
× RELATED மன்னர் சார்லஸ் இறந்ததாக வெளியான...