தமிழ்நாட்டில் காலை முதல் பரவலாக கனமழை: வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி..!!

கரூர்: மேற்குத்திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையை அடுத்த திருவெற்றியூர், எண்ணூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை லேசான சாரலாக தொடங்கிய மழை, திடீரென கனமழையாக உருவெடுத்தது. இதனால் திருவெற்றியூர் நெடுஞ்சாலையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்த நிலையில், அதன்பின் வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதேபோல் கரூர் ஜகதர் பஜார், தான்தோன்றி மலை, குளித்தலை, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்தது. ஈசாநத்தம், புலியூர் பரமத்தி, புகழூர் உள்ளிட்ட கிராமங்களில் காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நாகை நகர், பாலகிருஷ்ணாபுரம், சிலப்பாடி, தாமரைப்பாடி, ஈபி காலனி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதேபோல நத்தம் சுற்றுவட்டார பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மணப்பாறையில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Related Stories: