ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகி கணவன் பணத்தை இழந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை: பல்லாவரத்தில் சோகம்

பல்லாவரம்: பம்மல், தொல்காப்பியர் தெருவை சேர்ந்தவர் ஞான செல்வன் (31). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி வகிதா (28). தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக ஞானசெல்வம் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாக கூறப்படுகிறது. தினசரி இரவு முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். மாதம்தோறும் வாங்கும் சம்பளம் முழுவதையும் இதில் இழந்துள்ளார். இதனை மனைவி வகிதா கண்டித்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த சில தினங்களாக வகிதா கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினமும் வழக்கம் போல் ஞானசெல்வன் ஆன்லைன் ரம்மியில் ரூ.1000 இழந்துள்ளார்.

இது வகிதாவிற்கு மேலும் ஆத்திரமூட்டியது. இது குறித்து கணவரிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த வகிதா, வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், வகிதா உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருமணமாகி 4 வருடமாகுவதால், இந்த வழக்கு தாம்பரம் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: