துலீப் கோப்பை கிரிக்கெட் மேற்கு மண்டலம் சாம்பியன்

கோவை: தெற்கு மண்டல அணியுடனான துலீப் கோப்பை பைனலில், 294 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற மேற்கு மண்டல அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கு மண்டலம் 270 ரன், தெற்கு மண்டலம் 327 ரன் குவித்தன. 57 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய மேற்கு மண்டலம் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (128 ஓவர்). தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 265 ரன், பாஞ்சால் 40, ஷ்ரேயாஸ் 71, கேப்டன் ரகானே 15 ரன்னில் பெவிலியன் திரும்பினர். சர்பராஸ் கான் 127 ரன், ஹெட் படேல் 51 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து, 529 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய தெற்கு மண்டலம், 4ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்திருந்தது. சாய் கிஷோர் 1, ரவி தேஜா 8 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். சாய் 7 ரன்னில் வெளியேற, ரவி தேஜா 53 ரன் எடுத்து முலானி பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். பசில் தம்பி 0, கவுதம் 17 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, தெற்கு மண்டலம் 71.2 ஓவரில் 234 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மேற்கு பந்துவீச்சில் ஷாம்ஸ் முலானி 4, உனத்கட், அதித் ஷேத் தலா 2, கஜா, தனுஷ்கோடியன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 249 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற மேற்கு மண்டல அணி துலீப் கோப்பையை முத்தமிட்டது. ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜெய்தேவ் உனத்கட் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: