×

ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசுவதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது: ரவீணா ரவி

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கும் பல முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியவர், ரவீணா ரவி. குறிப்பாக நயன்தாரா, சமந்தா, எமி ஜாக்சன், அமைரா தஸ்தூர், காஜல் அகர்வால், ஆஷ்னா சவேரி, கேத்ரின் தெரசா, மடோனா செபாஸ்டியன், ரெஜினா, நிக்கி கல்ராணி, ராசி கன்னா, மஞ்சிமா மோகன், நிதி அகர்வால், அமலா பால், ஸ்ரீதிவ்யா, மஹிமா நம்பியார், ரெஜிஷா விஜயன், கிரித்தி ஷெட்டி உள்பட பல ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். பிறகு விதார்த் ஜோடியாக ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ‘காவல்துறை உங்கள் நண்பன்’, ‘ராக்கி’, ‘வீரமே வாகை சூடும்’ ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில் அவர் கூறியதாவது:   

நான் டப்பிங் பேசத் தொடங்கி 10 வருடங்கள் நிறைவடைந்தது. இந்தப் பயணத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி. சிறுவயது முதல் இன்றுவரை எல்லாப் படிகளிலும் எனக்கு துணை நிற்கும் பெற்றோரின் அளவுகடந்த அன்புக்கு நன்றி. என்னை எப்போதும் ஊக்குவிக்கும் என் தந்தை டப்பிங் கலைஞர் ரவி இன்று என்னுடன் இல்லை. ஆனால், என்னைப் பற்றி எல்லையற்ற பெருமிதம் கொள்வார் என்று நம்புகிறேன். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். எனது அம்மா ஸ்ரீஜா ரவிதான் எனக்கு குரு. இன்றுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் பேசி, 5 மாநில விருதுகளைப் பெற்று, 45 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமாகப் பயணித்து வருகிறார்.

இதுவரை நான் 104 இயக்குனர்களின் படங்களில் பணிபுரிந்துள்ளேன். அவர்கள் அனைவரும் ஒரு கலைஞராக என்னை மேம்படுத்திக்கொள்ள உதவி செய்துள்ளனர். நான் குரல் கொடுத்த ஹீரோயின்களுக்கும் நன்றி. திரையில் அவர்களது குரலாக நான் ஒலிப்பதில் கிடைக்கும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. பின்னணி குரல் அளிப்பதில் ஆத்ம திருப்தி. என் மனதுக்கு நெருக்கமான இந்த தொழிலை தொடர்ந்து செய்வேன். செய்கின்ற தொழிலுக்கு உண்மையாக இருந்தால், எல்லோருக்கும் அவர்களது கடினமான உழைப்புக்கு ஏற்ற பலன் கள் கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

Tags : Ravina Ravi , Dubbing for heroines gives soul satisfaction: Raveena Ravi
× RELATED ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசுவதில் ஆத்ம திருப்தி கிடைக்கிறது: ரவீணா ரவி