முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ்

சென்னை: வெகு விரைவில் திரைக்கு வரும் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு  தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். வரும் 29ம் தேதி தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள ‘நானே வருவேன்’ படம் வெளியாகிறது. இதை தனுஷ் அண்ணன் செல்வராகவன் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்துஜா, எல்லி அவ்ரம், செல்வராகவன், யோகி பாபு நடித்துள்ளனர். திரில்லர் கதை கொண்ட இப்படத்துக்கு சில ‘கட்’டுகளுடன் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகம், வரும் 30ம் தேதி வெளியாகிறது. இப்படத்துக்கு ‘கட்’ கொடுக்கவில்லை. வாள் சண்டை மற்றும் கொலைக்காட்சிகள் இருப்பதால் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இப்படம் 167 நிமிடங்கள் தியேட்டரில் ஓடும். மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருந்த ‘லூசிஃபர்’ என்ற படம், தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சிரஞ்சீவி, சல்மான்கான், நயன்தாரா நடித்துள்ளனர். அரசியல் கதை கொண்ட இப்படத்தில், சில அரசியல் வசனங் களை நீக்கி யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாகிறது. இதே தேதியில் பிரவீன் சத்தாரு இயக்கத்தில்  நாகார்ஜூனா, சோனல் சவுகான் நடித்த ‘தி கோஸ்ட்’ என்ற தெலுங்கு படம் வருகிறது. இதற்கும் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Related Stories: