வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ்.களுக்கான சம்பள சலுகை அதிரடி ரத்து

புதுடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ். ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கான ஊக்கத்தொகை, 25 சதவீதம் கூடுதல் அடிப்படை சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் ஒன்றிய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில், அங்கு பணியாற்றும் சூழல் மிகவும் மோசமாக இருந்தது. இதனால், இந்த மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ்., ஐபிஎஸ் மற்றும் ஐஎப்எஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகைகள், அடிப்படை சம்பளத்தில் கூடுதலாக 25 சதவீத தொகை உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கி, கடந்த 2009ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.

மேலும், ஓய்வு பெற்ற பிறகும் இந்த அதிகாரிகளுக்கு வீடுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மாநிலங்களில் தற்போது தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு, அமைதி நிலவுகிறது. இதன் காரணமாக, இந்த சலுகைகள் அனைத்தையும் ரத்து செய்வதற்கான முடிவை கடந்த 23ம் தேதி ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சி அமைச்சகம் எடுத்தது. இந்த உத்தரவு, நேற்று இரவு முதல் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், அரசுக்கு பெரும் தொகை மிச்சமாகும்.

Related Stories: