மக்களவை தேர்தலில் பாஜ.வை வீழ்த்த கூட்டணி டெல்லியில் சோனியாவுடன் நிதிஷ், லாலு சந்தித்து பேச்சு: அனைத்து கட்சிகளும் ஒன்று சேர அழைப்பு

புதுடெல்லி: அடுத்த மக்களவை தேர்தலில் பாஜ.வை தோற்கடிப்பதற்கான கூட்டணி அமைப்பது தொடர்பாக, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும் நேற்று சந்தித்து பேசினர். வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜ அல்லாத எதிர்கட்சிக்கான கூட்டணியை ஒன்றிணைக்கும் தீவிர பணியில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார். பீகாரில், பாஜவுடனான கூட்டணியை முறித்து கொண்ட பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நிதிஷ் முதல்வராகி உள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாவை நிதிஷ் குமாரும், ராஷ்டிரிய ஜனதா  தள தலைவர் லாலு பிரசாத்தும் நேற்று மாலை டெல்லியில் சந்தித்து பேசினர். சோனியா காந்தியை சந்தித்த பிறகு நிதிஷ் குமாரும்,  லாலுவும் பேட்டியளித்தனர். அப்போது பேசிய நிதிஷ் ,‘‘நாட்டை முன்னெடுத்து செல்ல அனைத்து எதிர்க்கட்சிகளும் கைகோர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கு பின் இதுகுறித்த உறுதியான திட்டம் வகுக்கப்படும்,’’ என்றார். லாலு கூறுகையில்,‘‘பாஜவை வீழ்த்துவதற்கு  அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் வரவேண்டும். காங்கிரசில் தலைவர் தேர்தல் நடக்கிறது. தேர்தல் முடிந்த பின் மீண்டும் சந்திக்கலாம் என சோனியா  கூறினார்,’’ என்றார்.

நிதிஷ் குமார் கடந்த 2015ம் ஆண்டுக்கு முன் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இருந்த போது சோனியாவை சந்தித்தார். அதன் பிறகு நீண்ட வருடங்களுக்கு பின் இப்போது தான் அவரை சந்தித்துள்ளார். லாலு பிரசாத்துக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால்  சிகிச்சை பெற்று வந்தார். அவரும் நீண்ட நாட்களுக்கு பின் தற்போது தான் தீவிர அரசியலில் இறங்கி உள்ளார். முன்னதாக, முன்னாள் துணை பிரதமரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் நிறுவனருமான மறைந்த தேவிலாலின் பிறந்த நாள் விழாவில் நிதிஷ் குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். அரியானா மாநிலம், பதேஹபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் நிதிஷ் குமார் பேசுகையில், ‘பாஜ அல்லாத அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்தால் நாட்டை சீரழிக்கும் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றி விடலாம். மூன்றாவது அணி கூடாது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே  அணியாக இணைந்தால் மட்டுமே, அடுத்த தேர்தலில் பாஜவை வீழ்த்த முடியும்,’’ என்றார். சரத்பவார் உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

*காங்கிரஸ் ஆப்சென்ட்

அரியானாவில் நேற்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கும்படி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இக்கட்சி தலைவர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை.

Related Stories: