×

சென்னையில் 5 நாட்கள் நடந்து வந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான மெயின் தேர்வு முடிந்தது: டிசம்பரில் ரிசல்ட் வெளியிட யுபிஎஸ்சி திட்டம்

சென்னை: சென்னையில் 5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிக்கான மெயின் தேர்வு நேற்றுடன் முடிந்தது. இதற்கான ரிசல்ட் டிசம்பரில் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய (2022ம் ஆண்டுக்கான) ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளில் 1011 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வை கடந்த ஜூன் 5ம் தேதி நடத்தியது. இத்தேர்வை சுமார் 5.5 லட்சம் பேர் எழுதினர். தொடர்ந்து ஜூன் 22ம் தேதி முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் இந்தியா முழுவதும் 13,090 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் சுமார் 610 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில் சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு கடந்த 16, 17, 18 24ம் தேதி மற்றும் நேற்று என 5 நாட்கள் நடந்தது. இறுதி நாளான நேற்று காலையில் விருப்பப்பாடம் முதல் தாள் தேர்வும், மாலையில் விருப்பப்பாடம் இரண்டாம் தாள் தேர்வும் நடந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் கோடம்பாக்கத்தில் உள்ள பதிப்பக செம்மல் கே.கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடந்தது. இந்த தேர்வை தேர்வர்கள் ஆர்வமுடன் எழுதினர். தேர்வுகள் அனைத்தும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவிஸ் சர்வீஸ் மெயின் தேர்வு 5 நாட்கள் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மெயின் தேர்வுக்காக சென்னையில் மட்டும் 2  பள்ளிகளில் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இதற்கான ரிசல்ட் அனேகமாக வருகிற டிசம்பர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது. டிசம்பர் மாதத்தில் ரிசல்ட் வெளியானால் பிப்ரவரி மாதம் நேர்காணல் நடைபெறும். அதே நேரத்தில் ஜனவரியில் ரிசல்ட் வெளியிடும் பட்சத்தில் மார்ச்சில் நேர்காணல் நடைபெற வாய்ப்புள்ளது. மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். இதில் தேர்வர்களின் விருப்பத்தின் அடிப்படையிலும், பட்டியலில் உள்ள தகுதி நிலை அடிப்படையிலும் பணி ஒதுக்கப்படும். அதன் பிறகு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். தகுதி நிலை அடிப்படையில் மாநில ஒதுக்கீடு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Chennai ,UPSC , 5-day long IAS, IPS main exam in Chennai ends: UPSC plans to release results in December
× RELATED நாடாளுமன்ற தேர்தல் எதிரொலி: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு