×

மேற்கு வங்கத்தில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட சிறுத்தை புலித்தோல் பறிமுதல்: விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரணை

விழுப்புரம்:  மேற்கு வங்கத்தில் இருந்து கரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தி வந்த சிறுத்தை புலி தோலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில், பேருந்துகளில் அதிரடி போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை மேற்குவங்க மாநிலம் கரக்பூரிலிருந்து விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே இருப்பு பாதை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரயில் இன்ஜின் அருகில் உள்ள பெட்டியில் சோதனை செய்தபோது, கேட்பாரற்று கிடந்த ஒரு சாக்கு மூட்டையை கைப்பற்றினர். சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் சிறுத்தை புலியின் தோல் இருந்ததை கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து அப்பெட்டியில் பயணம் செய்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் சாக்கு மூட்டை பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தகவல் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து சிறுத்தை புலியின் தோலை கைப்பற்றிய போலீசார், காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளை அழைத்து அதனை ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுத்தை புலியின் தோலை கடத்தி வந்தது யார், விழுப்புரத்தில் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட சிறுத்தைபுலி தோலின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும். இச்சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : West Bengal ,Villupuram , Villupuram railway, police investigating the leopard skin that was smuggled in the train
× RELATED மேற்குவங்க மாநில டிஜிபியை இடமாற்றம்...