கொள்ளிடம் ஆற்றில் குருவாடி தலைப்பில் மணல் திருட்டால் 5 ஆயிரம் ஹெக்டர் சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை: நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தா.பழூர்: கொள்ளிடம் ஆற்றில் குருவாடி தலைப்பில் மணல் திருட்டால் 5 ஆயிரம் ெஹக்டர் சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனே நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் குருவாடி தலைப்பில் துவங்குகிறது பொன்னாறு. இந்த பொன்னாற்று பாசனம் மூலம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு போகா சம்பா சாகுபடியை சுமார் 5 ஆயிரம் ஹெக்டர் நிலம் பாசனம் பெற்று விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் மதகை மூடியவாறு ஏற்பட்ட மணல் திட்டு காரணமாக பொன்னாற்றில் தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தினால் சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது பொன்னாற்றில் தண்ணீர் வந்த நிலையில் விவசாயிகள் சம்பா நடவுக்காக இயந்திர நடவு செய்வதற்கு கை நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு உள்ளிட்டவைகளுக்கு வயல்வெளிகளை சரி செய்து தண்ணீர் விட்டு சேர் அடித்து வந்த நிலையில் நடவு பணி தொடங்கும் தருவாயில் பொன்னாற்றில் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வராத காரணத்தினால் சேர் இறுகும் நிலையில் பறித்த நாற்றுகள் கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பொன்னாற்றில் தண்ணீர் வராததால் வாய்க்கால்கள் வறண்டு காணப்படுகிறது. இதனால் தற்போது தயார் நிலையில் உள்ள நாற்றுகள் கருகும் நிலை ஏற்படுவதால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் நிலை உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். இது குறித்து இடங்கண்ணி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம் கூறுகையில், தற்பொழுது பொன்னாற்று வாய்க்கால் பாசனத்தை நம்பி குருவாடி தலைப்பு முதல் தென்னவ நல்லூர், குழவடையான் கடைமடை வரை சுமார் 5,000 ஹெக்டர் பரப்பளவிற்கு மேல் விவசாயிகள் ஒருபோக சாகுபடியாக சம்பா நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீர் வந்த காரணத்தினால் தொடர்பும் மழை பெய்து வந்த காரணத்தினாலும் விவசாயிகள் நெல் விதைப்பை தாமதமாக செய்தனர். தற்பொழுது நெல் விதைப்பு செய்யப்பட்டு நடவு நடைபெறும் தருவாயில் சேர் அடிக்கப்பட்டு இருந்த நிலையில் தண்ணீர் பொன்னாற்றில் இல்லாத காரணத்தினால் வாய்க்கால்கள் காய்ந்து சேர் அடித்துள்ள வயல்களும் காய்ந்து வருகின்றது. இதனால் சம்பா சாகுபடி நடவு செய்வது கேள்விக்குறியாகி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து இதுபோன்று அதிகப்படியான நீர்வரத்து காரணமாக கொள்ளிடம் ஆற்றில் குருவாடி தலைப்பில் மணல் திட்டுகள் ஏற்பட்டு பொன்னாற்றில் தண்ணீர் வராத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனை சரி செய்ய ஒரு வார காலம் ஆகிறது. இதனால் பயிர்கள் கருகும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தெரிவித்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. இனிவரும் காலங்களிலாவது இதுபோன்ற நிகழாமல் இருக்க குருவாடி தலைப்பில் கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டி பொண்ணாற்று மதகுகளை பெரிய அளவிலான சட்டருடன் கூடிய மதகுகள் அமைத்து விவசாயிகள் பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: