×

சமர்கண்ட் மாநாட்டில் இருந்து திரும்பிய போது சீனாவில் அதிபர் ஜின்பிங் கைது?

* விமான நிலையத்தில் சுற்றி வளைத்து அதிரடி
* பீஜிங்கில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்
* ராணுவ தளபதி லீ சாவ்மிங் புதிய அதிபர்
* சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் தகவல்

பீஜிங்: சீனாவில் அதிபர் ஜின்பிங்கை ராணுவம் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருப்பதாகவும், ஆட்சியை ராணுவம் கைப்பற்றி இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பரபரப்பு தகவல் பரவி வருகிறது. சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இவர் வாழ்நாள் அதிபராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக, உயிருடன் இருக்கும் வரையில் ஜின்பிங் மட்டுமே சீன அதிபராக இருப்பார். உலகின் முதன்மை வல்லரசு நாடாக சீனாவை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் இவர் செயல்பட்டு வருகிறார். உலக நாடுகளுக்கு இவர் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்.

இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளின் எல்லைகளை ராணுவ பலத்தை கொண்டு ஆக்கிரமித்து அடாவடி செய்வது, தென் சீன கடல் பகுதி முழுவதும் தனது நாட்டுக்கு சொந்தம் என உரிமை கொண்டாடுவது, அண்டை நாடான தைவானுக்கு உரிமை கொண்டாடுவது, பொருளாதார பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் கடன் கொடுத்து, 60க்கும் மேற்பட்ட நாடுகளை கடனில் மூழ்கடித்து, அவற்றை தனது அடிமை நாடுகளாக வைத்திருப்பது என எண்ணற்ற சர்ச்சைகளை இவர் செய்து கொண்டிருக்கிறார். இதனால், உலகளவில் இவர் மீது அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன.

இந்நிலையில், சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள சமர்கண்டில் நடைபெற்ற ஷாங்காய் ஓத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் ஜின்பிங்  கலந்து கொள்ள சென்றார். இதில், பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு கடந்த 16ம் தேதி ஜின்பிங் நாடு திரும்பியதும், பீஜிங் விமான நிலையத்திலேயே ராணுவம் அவரை சுற்றி வளைத்து கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு தகவல் வேகமாக பரவி வருகிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், சீன ராணுவத்தின் தலைமை பொறுப்பில் இருந்தும் இவர் நீக்கப்பட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இவை எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

அதிபர் ஜின்பிங்கிற்கு பதிலாக, தற்போது சீன ராணுவமான மக்கள் விடுதலை ராணுவத்தின் தளபதியாக உள்ள லீ சாவ்மிங், அரசுக்கு பொறுப்பேற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் தற்போது குறைந்த அளவிலான உள்நாட்டு விமானங்கள் மட்டுமே பறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. கடந்த 22ம் தேதி பறந்து கொண்டிருந்த 60 சதவீத விமானங்கள், உடனடியாக தரையிறங்கும்படி எந்த வித காரணமும் கூறப்படாமல் திடீரென உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, விமானங்கள் நடுவழியிலேயே ஆங்காங்கு உள்ள விமான நிலையங்களில் தரை இறங்கி இருக்கின்றன.

சீனாவை சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெனிபர் சாங், தற்போது அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து வசித்து வருகிறார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘செப்டம்பர் 22ம் தேதியன்று, தலைநகர் பீஜிங்கை நோக்கி, 80 கிமீ நீளத்துக்கு ராணுவ வாகனங்கள் அணி வகுத்து சென்று கொண்டிருக்கின்றன. அதிபர் ஜின்பிங் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை, ராணுவ தலைமை பொறுப்பில் இருந்தும் நீக்கி இருக்கின்றனர்,’ என குறிப்பிட்டு இருக்கிறார். சீனாவில் நடக்கும் சம்பவங்களை உறுதிப்படுத்தி, அமெரிக்காவில் இருந்து இவர் அடிக்கடி சமூக வலைதள செய்திகளை வெளியிட்டு வருகிறார். இதன் காரணமாக, இவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவின்படி, ஜின்பிங் கைது செய்யப்பட்டது உண்மையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

* காரணம் என்ன?
சீனாவில் சமீப காலமாக லஞ்சம், ஊழலுக்கு எதிராக அதிபர் ஜின்பிங் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களே, சீன அரசில் அமைச்சர்களாகவும், முக்கிய துறைகளின் தலைவர்களாகவும் பதவி வகிக்கின்றனர். இவர்களில் தனது எதிர்ப்பாளர்களை குறிவைத்து ஜின்பிங் ஊழல் வழக்கில் சிக்க வைத்து, தண்டனை அளித்து பழி வாங்கி வருவதாக சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் புகைச்சல் உள்ளது. கடந்த சில வாரங்களில் சீனாவில் இக்கட்சியை சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்களுக்கு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில், ஒருவருக்கு மட்டும் நேற்று முன்தினம் மரண தண்டனை ஆயுளாக குறைக்கப்பட்டது. இது தவிர, அதிகாரிகள் மட்டத்தில் இருந்த பலர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இதனால் ஏற்பட்ட கடும் அதிருப்தியின் காரணமாகவே, ஜின்பிங்கின் பதவியை கட்சியின் மூத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து பறித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags : President Xi Jinping ,China ,Samarkand conference , President Xi Jinping arrested in China while returning from the Samarkand conference?
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...