எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட பணிகள் 2026ல் முடிவடையும்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

திருச்சி: எய்ம்ஸ் மருத்துவமனை திட்டப்பணிகள் 2026ல் முடிவடையும் என ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று அளித்த பேட்டி: கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜ, இந்து முன்னணியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடுமையான தண்டனையை தமிழக அரசு வழங்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் ஒப்பந்தம் கடந்த 2018ம் ஆண்டு, ஜப்பான் நாட்டு நிறுவனத்துடன் ரூ.1,664 கோடிக்கு போடப்பட்டது.

அதற்கான நிதி மற்றும் திட்டப்பணிகள் உள்ளிட்டவற்றிற்கு இந்த மாதம் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை பணி 2026 அக்டோபர் மாதம் நிறைவடையும் என்று தான் அந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திருச்சி வானொலி நிலையம் இடம் மாற்றம் செய்வதாகவும், வானொலி நிலையம் மூடப்பட உள்ளதாகவும் வதந்திகள் பரப்பட்டு வருகிறது. அது உண்மையல்ல. திருச்சி வானொலி நிலையம் மிகப்பழமையானது. அதை மாற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். நயினார் நாகேந்திரன், முதல்வர் மற்றும் அமைச்சர் பற்றி புகழ்ந்து பேசியுள்ளதால் அவர் திமுகவில் இணையப்போகிறார் என்று கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, அது உங்களின் யூகம் தான் என்றார்.

Related Stories: