×

100% வாக்குகளை அடைய தேர்தல் மூலம் மக்களால் தேர்வு செய்யப்படும் எம்பி, எம்எல்ஏக்களின் பணிகளை தகவல் உரிமை சட்டத்தில் தரவேண்டும்: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மாநில தகவல் ஆணையம் ஆலோசனை

சென்னை: திருவொற்றியூரை சேர்ந்த தூயமூர்த்தி என்பவர் உரிய தகவல் தரப்படாததால் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகவில்லை. மாநகராட்சி தகவல் அதிகாரி ஆஜராகி, மனுதாரர் கேட்ட தகவல்கள் அதிகம் என்பதால் தகவல்களை திரட்ட முடியவில்லை என்றார். இதை ஏற்றுக்கொண்ட மாநில தகவல் ஆணையர் அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரரை போல் பலர் இதுபோன்ற தகவல்களை கோரியுள்ளனர். தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்களை பெற அனைத்து இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது. ஜனநாயகத்தின் மாண்பை காக்க மனுதாரர்களிடம் இந்த ஆணையம் சில கேள்விகளை கேட்டுள்ளது. அதில் வாக்களித்துள்ளீர்களா என்பது முக்கியமான கேள்வியாகும். அதற்கு சிலர் நாங்கள் வாக்களிக்கவில்லை.

பெரும்பாலான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக இருப்பதால் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படாததால் தேர்தல்களில் வாக்களிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால், அதே அரசியல்வாதிகளின் செயல்களை பாராட்ட மறந்துவிடுகிறார்கள். வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களிடம் உள்ள தவறான கருத்து தற்போது வாக்கு சதவீதம் வெகுவாக குறைய காரணமாகிவிட்டது. சமீபத்தில் நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலில் அதிகம் படித்தவர்கள் வசிக்கும் வார்டுகளில் குறைந்த சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறிப்பாக 133வது வார்டில் 31 சதவீதம்தான் வாக்கு பதிவானது. நாட்டில் உள்ள ஏராளமான எம்.பி, எம்எல்ஏக்கள் மக்கள் பணியை சிறப்பாக செய்கிறார்கள்.

அவர்கள் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ளனர் என்பதையும் மறந்துவிடக்கூடாது. இந்த தகவல்களும் மக்களுக்கு தெரிய வேண்டும். பிரதமர், முதல்வர்கள், ஒன்றிய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்த சேவைகளையும் தகவல்களில் தரப்பட வேண்டும். அப்போதுதான் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் நோக்கம் முழுமையடையும். எனவே, மக்களால் தேர்வு செய்யப்படும் பிரதிநிகள் செய்துள்ள பணிகள் தொடர்பான தகவல்கள் அனைத்தும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும். அப்போதுதான் தேர்தலில் 100 சதவீத வாக்குகள் பதிவாக வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும். இவ்வாறு ஆணையர் உத்தரவில் கூறியுள்ளார்.

Tags : State Information Commission ,Election Commission of India , The Right to Information Act should include mandates of elected MPs and MLAs to achieve 100% voter turnout: State Information Commission advises Election Commission of India
× RELATED வாக்குப்பதிவின் முக்கியத்துவத்தை...