×

இந்தியாவுடன் இணைந்து செயல்பட முழு உலகமும் விருப்பம்: பிரதமர் மோடி பேச்சு

மண்டி: ‘நாட்டில் ஏற்பட்டுள்ள வலுவான அடித்தளத்தின் காரணமாக, மொத்த உலகமும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரங்களை பிரதமர் மோடி நலத் திட்டங்களை தொடங்கி வைத்து செய்து வருகிறார். இந்நிலையில், இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் பாஜ யுவ மோர்ச்சா சார்பில் இளைஞர்கள் பேரணி நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டரில் அவரால் செல்ல முடியவில்லை. இதனால், காணொலி மூலமாக பேரணியில் அவர் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களை போல், இமாச்சல பிரதேசத்திலும் மீண்டும் பாஜ ஆட்சியை கொண்டு வர இம்மாநில வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர்.  உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் வாக்காளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு  ஒருமுறை ஆளும் கட்சியை மாற்றும் வழக்கத்தை பின்பற்றினர். ஆனால், அவர்கள்  இப்போது இந்த நடைமுறையை கைவிட்டனர். இதேபோல், இமாச்சலப் பிரதேசத்தின்  வாக்காளர்களும் இளைஞர்களும் பாஜ.வால்தான் நிலையான ஆட்சியை வழங்க முடியும், மாநிலத்தை மேம்படுத்தும் திசையில் கொண்டு செல்ல  முடியும் என நம்புகின்றனர். பல தசாப்தங்களாக நாட்டில் கூட்டணி அரசுகள் இருந்தன. இது  நடுவில் கவிழ்ந்து விடும். 8 ஆண்டுகளுக்கு முன்பு 2014ல், வாக்காளர்கள்  ஒன்றியத்தில் வலுவான, நிலையான அரசுக்கு வாக்களித்தனர். இது,  பணி கலாசாரத்திலும், கொள்கைகளில் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வந்து வலுவான அடித்தளம் உருவாகி இருக்கிறது. இதனால், முழு உலகமும் இப்போது  இந்தியாவுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : India ,PM Modi , Whole world willing to work with India: PM Modi speech
× RELATED நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்..!!