தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.75 கோடி போதை பொருள் சிக்கியது

தூத்துக்குடி: மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.75 கோடி மதிப்பிலான கசகசா பிடிபட்டது. பாப்பி சீட் எனப்படும் கசகசா மருத்துவதுறையில் உரிய அனுமதியுடன் மருந்துகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. இதனை துருக்கி, கிர்க்கிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளில் இருந்து மட்டுமே இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய அனுமதி உள்ளது. இதற்கும் மத்திய பிரதேசம் மாவட்டம் குவாலியரில் உள்ள சிஎப்டிஏ என்ற மத்திய அரசு நிறுவனத்திடம் அனுமதி சான்றிதழ் பெறவேண்டும்.

ஆனால் இந்த பாப்பிசீட் போதை பொருள் தயாரிப்பதற்காக அவ்வப்போது கடத்தி வரப்படுகிறது. தூத்துக்குடிக்கும் இதுபோல பாப்பி சீட் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கன்டெய்னர் மீது சந்தேகம் எழுந்தது. அந்த கன்டெய்னருக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் அது மதுரையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு மலேசியாவில் இருந்து ஒயிட் சிமென்ட் இறக்குமதி செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து அதிகாரிகள் அந்த கன்டெய்னரை திறந்து சோதனையிட்டனர். அதில் முதலில் ஒயிட் சிமென்ட்டும் அதன் பின்புறம் ஈரம் புகாதவாறு பேக்கிங் செய்யப்பட்ட மூட்டைகளில் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட போதை பொருளான பாப்பி சீட்டும் இருந்தது. இதனையடுத்து தலா 25 கிலோ எடையிலான 400 மூட்டைகளில் இருந்த 10 மெட்ரிக் டன் எடையிலான பாப்பி சீட் எனப்படும் ரா கசகசாவையும், 3 டன் எடையிலான ஒயிட் சிமென்டையும் பறிமுதல் செய்தனர்.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட பாப்பிசீட் மதிப்பு மட்டும் ரூ.1.75 கோடியாகும். இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் மற்றும் மதுரையில் உள்ள இறக்குமதி நிறுவனத்தில் மத்திய வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் ஆப்கானிஸ்தானில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட 25 மெட்ரிக் டன் பாப்பி சீட் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: