தாம்பரம் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: பைக்கில் வந்த 2 வாலிபர்களுக்கு வலை

தாம்பரம்: தாம்பரம் அருகே ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில், பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பினர். இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ராஜராஜேஸ்வரி தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (63).  ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி மாவட்ட தலைவராக உள்ளார். இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

சீதாராமன், தினமும் காலை நேரத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம்.  அதற்காக இன்று அதிகாலை 3.30 மணியளவில் எழுந்து குளித்து விட்டு  தயாராகி கொண்டிருந்தார். 3.55 மணியளவில் வீட்டின் வெளியே பயங்கர வெடிசத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சீதாராமன், வெளியே வந்து பார்த்தார். அப்போது, கார்  நிறுத்தி வைத்திருந்த பகுதியில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. உடனே சீத்தாராமனும், அவரது குடும்பத்தினரும் கீழே ஓடி வந்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

தகவலறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.  கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், சீதாராமனின் வீடு முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு பெட்ரோல் நிரப்பட்ட பாட்டிலில் தீ பற்ற வைத்து வீசிவிட்டு தப்பி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: