×

நாங்குநேரி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரம்: பயணிகளை கவரும் சுவர் ஓவியம்

நாங்குநேரி: நாங்குநேரி ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. நாங்குநேரி ரயில் நிலையம் மூலம் நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் தாலுகா பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் பயணித்து வருகின்றனர். நாங்குநேரி ரயில் நிலையத்தில் தற்போது இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் நடைமேடை நீளம் நீட்டிப்பு, மூன்றாவது நடைமேடை அமைக்கும் பணி, நிழல்குடைகள், புதிய குடிநீர் வசதி, மின்விளக்குகள், பளபளக்கும் கடப்பாக்கல்லால் ஆன இருக்கைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகிறது.

அதில் நாங்குநேரி வட்டாரத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பயண சீட்டு வழங்கும் பகுதியில் சுவர் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதில் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில், திருக்குறுங்குடி மலை நம்பி கோயில், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் விஜயநாராயணம் கடற்படை தளம் ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையில் ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நாங்குநேரி ரயில் நிலையம் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. அதே நேரத்தில் ரயில் நிலையத்திற்கு பயணிகள் வந்து செல்ல ஒரே ஒரு நுழைவாயில் மட்டும் சிறிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமான நேரங்களில் பயணிகள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் நிலை உள்ளது. ஆகவே பயணிகள் எளிதாக சென்று வர கூடுதல் நுழைவாயில் அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும் அதிக பயணிகள் வருகை காரணமாக இங்கு கூடுதலாக ரயில்கள் நின்று செல்லவும், இங்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையாக இடம் ஒதுக்கி வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே கேட் இன்று மூடல்
நாங்குநேரி ரயில்வே கேட் இன்று மூடப்படுகிறது. நாங்குநேரி-திசையன்விளை சாலையில் உள்ள  ரயில்வே கேட்டில் இரட்டை தண்டவாளம் அமைப்பில் இணைப்பு பணிகள் நடைபெற  உள்ளதால் இன்று (24ம் தேதி) காலை 9 மணி முதல் நாளை (ஞாயிறு) காலை 9 மணி வரை  ரயில்வே கேட் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது. மேலும்  பயணிகள் சிரமத்தை தவிர்க்க மாற்று வழியை பயன்படுத்திடவும் அறிவிப்பு பலகை  வைக்கப்பட்டுள்ளது.

Tags : Nanguneri ,station , Development work in progress at Nanguneri railway station: Wall painting to attract commuters
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...