×

திருப்புவனம் நெல்முடிக்கரையில் புதிய தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் சாலை: கிராமமக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியது

திருப்புவனம்: திருப்புவனத்தில் புதிய தொழில்நுட்பத்தில் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருப்புவனம் நெல்முடிக்கரை பழையூர் வழியாக வயல்களுக்கு செல்லவும் கண்மாய்க்கரை அதிகமுடைய அய்யனார் கோயிலுக்கு செல்லவும் பயன்படும் ரோடு திருப்புவனம் யூனியன் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் இருந்தது. விவசாயிகள் வயலுக்கு விதை, நாற்று மற்றும் உரம் வகைகள் கொண்டு செல்ல சிரமப்பட்டனர். இந்த ரோட்டில்தான் அரசு நெல் கொள்முதல் நிலையமும் விதை சுத்திகரிப்பு மையமும் அமைந்துள்ளன.

கொள்முதல் மையத்திற்கு மாட்டு வண்டிகள், மினி சரக்கு வேன்களில் விவசாயிகள் நெல்மூட்டைகளை கொண்டு வருவதற்கும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி மெயின் ரோட்டுக்கு வருவதற்கும் முக்கியமான ரோடாகும். இங்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என தினகரனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அனைவரின் கோரிக்கையை ஏற்று தற்போது பாரத் நிர்மாண் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் திருப்புவனம் புல்வாய்க்கரை சாலை பிரிவிலிருந்து கண்மாய்க்கரை அதிகமுடைய அய்யனார் கோயில் வரை 3.400 கிமீ தூரத்திற்கு சுமார் ரூ.1 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கவும் 4 சிறுபாலங்கள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பொதுவாக இது போன்ற கிராம சாலைகளில் ஜல்லிகள் பரப்பி அதன் மீது செம்மண் கிராவல் கொட்டி தண்ணீர் ஊற்றி டோசர் உருளையில் அமுக்கி இறுக்கம் செய்து, அதன் மேல் கருங்கல் சிப்பியுடன் தார் கலந்து சாலை அமைப்பது வழக்கம். ஆனால் இந்த சாலை முன் மாதிரி திட்டமாக புதிய தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. முதலில் சிமிண்டையும் செம்மண் கிராவலையும் சாலையில் பரப்பிவிட்டு வயல்களில் உழுத பின்னர் கட்டிகளை உடைக்க பயன்படுத்தப்படும் தொழிபுரட்டியை டிராக்டரில் இணைத்து சிமிண்டையும் கிராவலையும் கலந்து தண்ணீர் தெளித்து டோசர் உருளையால் உருட்டப்படுகிறது.
அடுத்ததாக ஜல்லியும் செம்மண் கிராவலும் போட்டு டோசர் உருளை விட்டு அதற்கு மேல் தார்ரோடு அமைக்கப்படுகிறது.

இதுபோன்று அடுக்கு அடுக்காக மூன்றடுக்கில் இந்த ரோடு புதிய டெக்னாலஜியில் போடப்பட்டு வருகிறது. அமைக்கப்படும் இந்த சாலையை 2026 வரைக்கும் ஆண்டுதோறும் தனியாக நிதி ஒதுக்கி பராமரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடியில் இரண்டு இடங்களிலும் திருப்புவனத்திலுமாக மூன்று இடங்களில் புதிய தொழில் நுட்பத்தில் இது போன்று ரோடு அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மூன்றடுக்குகளில் தயாராகிறது
திருப்புவனம் பி.டி.ஓ. ராஜசேகரன் கூறுகையில், திருப்புவனம் கண்மாய் ரோடு ஒன்றிய அரசின் பாரத பிரதமர் கிராம சாலை திட்டத்தில் நடந்து வருகிறது. வழக்கமாக இல்லாமல் புதிய தொழில் நுட்பத்தில் ‘சிமிண்ட் ஸ்டைன்லசேசன்’ என்ற புதிய தொழில் நுட்பத்தில் அடுக்கடுக்காக மூன்றடுக்குகளில் அமைக்கப்படுகிறது. சிமிண்ட் கிராவல் ஒரு அடுக்காகவும், கிராவல் ஜல்லி ஒரு அடுக்காகவும், மூன்றாவதாக தார் ஜல்லி கலவையுமாக மூன்றடுக்கில் இந்த சாலை அமைக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மூன்று இடங்களில் முன்மாதிரியாக இந்த சாலை அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

Tags : Tiruppuvanam ,Nelmudikarai , New technology road to be constructed at Tiruppuvanam Nelmudikarai: Villagers' long-standing demand has been fulfilled
× RELATED திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை...