×

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மூடிக்கிடக்கும் புறக்காவல் நிலையம்:பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவதால் மூடிக் கிடக்கும் புறக்காவல் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம்  மாவட்ட தலைநகராக மட்டுமின்றி பட்டு நகரம், கோயில் நகரம், சுற்றுலா நகரம் என பல்வேறு சிறப்புகளை பெற்றது. இத்தகைய காஞ்சிபுரம் நகரத்தின் பேருந்து நிலையத்தில் சமூக விரோத செயல்கள் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பேருந்து நிலையத்தில் செய்யாறு பேருந்துகள் நிற்கும் பகுதியில் காலை முதல் இரவு வரை சிலர் மது அருந்தி வருகின்றனர். பேருந்து நிலையத்திற்கு வெளியே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சித்திரகுப்தர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கும் பெரும்பாலானோர், பேருந்து நிலையத்தில் உத்திரமேரூர் மற்றும் செய்யாறு பேருந்துகள் நிற்கும் இடத்தில் அமர்ந்து மது அருந்துவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதனால், இப்பகுதியில் நிறுத்தப்பட வேண்டிய பேருந்துகள் ஒதுக்கப்பட்ட இடங்களில் நிறுத்தாமல் சற்று தள்ளி நிறுத்துவதால் பேருந்து நிலையத்தில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், பயணிகள் அமரும் இடத்தில் சிறு வியாபாரிகள் அதிக அளவில் கடை வைத்து வியாபாரம் செய்கின்றனர்.

இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சமூக விரோதிகள் சிலர் கஞ்சா போன்ற போதைப் பொருள்களை அப்பகுதியில் புழக்கத்தில் விடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், பேருந்து நிலையத்தில் திருட்டு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நிகழ்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, முகூர்த்த நாட்களில் நகை, பணம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பயணிகள் இழப்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதனால் பெண்கள், முதியவர்கள் பேருந்து நிலையத்திற்கு அச்சத்துடனே வந்து செல்கின்றனர். மேலும், இரவு நேரங்களில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் மறைவான இடங்களில் பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாகவும் தற்போது புகார்கள் எழுந்துள்ளது.

எனவே, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை தலையிட்டு அனைத்து மின் விளக்குகள் எரிய செய்வது, சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் முக்கிய பகுதிகள் மற்றும் நுழைவாயில், வெளியேறும் பகுதிகளில் அமைப்பது உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து பயணிகள், பொதுமக்களின் அச்சம் போக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

*குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு
காஞ்சிபுரம் பேருந்து நிலைய வளாகத்தில்  கடந்த  சில மாதங்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட புறக்காவல் நிலையம் தற்போது மூடப்பட்டு கிடக்கிறது. பேருந்து நிலைய வளாகத்தில் புறக்காவல் நிலையம் செயல்பட்டு வந்தபோது  இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் குறைந்திருந்தது.  காவல்துறையினர் இங்கு பணியில் இருந்து கண்காணித்து வந்ததால் சமூக விரோதிகளின் குற்றச்செயல்களும் குறைந்தே காணப்பட்டது.

இந்நிலையில், இப்புறக்காவல் நிலையம் தற்போது பூட்டிக் கிடைப்பதால் குற்றச் செயல்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. புறக்காவல் நிலையத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பேருந்து நிலையத்திற்குள் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டால் குற்றச் செயல்கள் கட்டுக்குள் வரும். இது சம்பந்தமாக காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு காஞ்சிபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறந்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.

Tags : Kanchipuram Bus , Closed Outpost at Kanchipuram Bus Stand: Request to bring it into use
× RELATED காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில்...