×

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு கறவை மாடு வாங்க மானியத்துடன் கடன்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  2022-2023ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்  புதிய அறிவிப்பில் பெருமளவில் விவசாய தொழில் புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக மாற்றிடும் வகையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் கறவைமாடு வாங்க ரூ.1.5 லட்சம் திட்டத்தொகையில் 30 சதவீதம், அதாவது ரூ.45 ஆயிரம் மானியமும் மீதமுள்ள தொகை வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் வயது வரம்பு 18 முதல் 65 வரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தின்கீழ் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தில், பயன்பெற விண்ணப்பிப்பவர்கள் ஆதிதிராவிடராக இருப்பின் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும் பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com என்ற இணையதள முகவரியில் தொழில் முனைவோர் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பதாரர் புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை மற்றும் மாடு வாங்குபவரிடமிருந்து பச்சைத்தாளில் மாடுகளின் விலையை குறிப்பிட்டு எழுதி வாங்கிய சான்று ஆகிய சான்றுகளுடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பங்கள் தாட்கோ இணையதளத்தில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். எனவே, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Subsidized loan for purchase of milch cow for Adi Dravidian tribals
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...