திருப்போரூர் - நெம்மேலி இடையே பக்கிங்காம் கால்வாய் பாலத்தை பராமரிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் - நெம்மேலி இடையே பக்கிங்காம் கால்வாய் பாலத்தை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். பழைய மாமல்லபுரம் சாலைையயும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் பக்கிங்காம் கால்வாயில் கடந்த 2011ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை பயன்படுத்தி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை, வட நெம்மேலி, புதிய கல்பாக்கம், நெம்மேலி, பேரூர், சூளேரிக்காடு, பட்டிபுலம் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் திருப்போரூர் ஒன்றிய அலுவலகம், வேளாண் அலுவலகம், மின் வாரிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

மேலும், கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் தங்களின் மீன் விற்பனைக்கு இந்த பாலத்தின் வழியாகத்தான் வந்து செல்கின்றனர். இந்த பாலம் செங்கல்பட்டு மாவட்ட நெடுஞ்சாலை துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாலம் கட்டப்பட்டு 10 ஆண்டுகள் ஆகி விட்டதால் தற்போது பாலத்தின் இரு முனைகளிலும் சாலை இணைப்பின் மட்டம் குறைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாலத்தின் இரு பக்கங்களிலும் மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், பாலத்தின் வலு குறைந்து வருவதாக வாகன ஒட்டிகள் தெரிவிக்கின்றனர்.

வாகனங்கள் பாலத்தை கடக்கும்போது அதிர்வு ஏற்படுவதாகவும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கான்கிரீட் பாலத்திற்கும் சாலைக்கும் இடையே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தை சந்திக்கின்றனர். எனவே, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த பாலத்தின் இரு பக்கங்களிலும், சாலை இணைப்பை சமப்படுத்த வேண்டும் என்றும், பாலத்தில் வளர்ந்துள்ள மரங்களை அகற்றி பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: