×

காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப் டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை:கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப் டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் அங்கமாக விளங்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கடந்த 87 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது. இந்நிறுவனத்தின் கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. அவ்வகையில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் காந்தி ரோடு சாலையில் உள்ள காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்  தீபாவளி - 2022 விழாக்கால சிறப்பு தள்ளுபடி  விற்பனையினை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி குத்து விளக்கு ஏற்றி  துவக்கி வைத்தார். அதன்பின், விற்பனையகத்தில் வைக்கப்பட்டுள்ள தீபாவளி பண்டிக்கைக்கான புதிய ரக சேலைகள் உள்ளிட்ட பல்வேறு வகையான சேலைகளை பார்வையிட்டு அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் ஊழியர்களிடம் கேட்டறிந்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும், மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தீபாவளி பண்டிகை ஒட்டி அறிமுகப்படுத்தப்பட்ட சேலை ஒன்றினையும் வாங்கிச் சென்றார்.

இவ்வாண்டு புதிய ரக வரவுகளாக ட்வில் வீவ் ஆயத்த சட்டைகள், காம்பிரே ஆயத்த போர்வைகள், ஸ்லப் காட்டன் சட்டைகள், டிசைனர் காட்டன் சேலைகள், டிசைனர் கலக்ஸ்ஷன் போர்வைகள், காம்பிரே போர்வைகள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், புதிய வடிவமைப்புகளில் மென் பட்டு, அனைவருக்கும் பட்டு, ஆர்கானிக் சேலை ரகங்கள் போன்ற பல்வேறு பட்டு புடவைகள், பருத்தி சேலைகள் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை கவரும் வகையில் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.113.53 லட்சம் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டிற்கான தீபாவளி விற்பனை இலக்கு ரூ.150 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விழாவில் கோ-ஆப்டெக்ஸ் வேலூர் மண்டல மேலாளர் நாகராஜன், காமாட்சி கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் பெருமாள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Diwali ,Kanchipuram ,Kamatchi Co-op , Special Diwali Discount Sale at Kanchipuram Kamachi Co-op Textiles: Collector Aarti Launches
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...