திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனைக் கூட்டம்: ஒன்றியகுழு தலைவர் தலைமையில் நடந்தது

திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம்  நடந்தது. தமிழகத்தில் பருவ மழை தொடங்க உள்ள நிலையில் திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லா கான்  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீ.காந்திமதிநாதன், இரா.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர்கள் ஸ்ரீராம் காந்தி, ஜெயலலிதா ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது.  மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய இடங்களை கண்டறிந்து அது பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மழை காலங்களில் தொற்று நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதேபோல், மழை நீர் வடிகால்வாய் மற்றும் கல்வெட்டுப் பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்றி,  தூய்மைப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், ஊராட்சி ஒன்றிய முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் வளர்ச்சி பணிகளை உடனுக்குடன் துரிதமாக முடிப்பது, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. அப்போது சிறு, சிறு பாலங்களுக்கு இடையில் உள்ள அடைப்புகளை உடனடியாக அகற்றி மழைநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் மதியழகன், குமார், பணி மேற்பார்வையாளர்கள் கோகிலா, தமிழ்செல்வி மற்றும் அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: