திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் மேற்கூரை பெயர்ந்து விழும் அபாயம்: சீரமைக்க பயணிகள் கோரிக்கை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தின் மேற்கூரை பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், இதை சீரமைக்க வேண்டும், என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவொற்றியூர் சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு, தங்க சாலை, உயர் நீதிமன்றம், பெசன்ட் நகர், செங்குன்றம் போன்ற பகுதிகளுக்கு சுமார் 50 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் பயணிக்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள், முதியவர்கள், பெண்கள் என தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்தப் பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர்.

மிகவும் பழமை வாய்ந்த இந்த சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் சிமென்ட் ஷீட்டுகளை கொண்டு அமைக்கப்பட்ட மேற்கூரை ஆங்காங்கே உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால், மழை காலத்தில் இந்த மேற்கூரையிலிருந்து தண்ணீர் கசிவதால் பயணிகள் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். அமர்வதற்கு இருக்கைகள் கூட சரியில்லை. லேசாக காற்று அடித்தால் கூட இந்த மேற்கூரை பெயர்ந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, இந்த பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளுடன் சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பல காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி வருகின்ற மழைக் காலத்திற்குள் பழுதடைந்துள்ள இந்த பேருந்து நிலைய மேற்கூரையை சீரமைக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘தினசரி ஏராமமான மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி வரும் இந்த பேருந்து நிலையத்தில் முறையான கழிவறை வசதியில்லை, சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் புதிதாக கழிவறை கட்ட திட்டமிடப்பட்டு காங்கிரீட் கம்பிகள் கட்டப்பட்டன.

ஆனால் அந்த பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. மேற்கூரை உடைந்து மழைநீர் கசிவதால் மழைக்காலத்தில் நனைந்துக்கொண்டு நாங்கள் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த சுங்கச்சாவடி பேருந்து நிலையம் அந்த நிலையிலேயே உள்ளது என்பது வேதனையாக உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

சேதமடைந்த அலுவலக கட்டிடம்

சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் கிளை மேலாளர் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பயன்படுத்தக்கூடிய அலுவலக சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு உள்ளது. இங்குள்ள கழிவறை உடைந்து உள்ளே மழைநீர் கசிகிறது. எந்த நேரத்திலும் இது இடிந்து விழும் நிலையில் இருப்பதால் இதை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டு புதிய அலுவலகம் கட்டித் தர வேண்டும் என்று போக்குவரத்து ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சுறுத்தும் மின்பெட்டி

சுங்கச்சாவடி பேருந்து நிலைய வளாகத்திற்குள் மின் பெட்டி ஒன்று உள்ளது. இது எந்த ஒரு பிடிப்பும் இல்லாமல் மேலோட்டமாக வைத்திருப்பதால், மழைக்காலத்தில் சரிந்து கீழே விழுந்து பெரிய அளவில் விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே, இந்த மின் பெட்டியை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: