கனடாவில் வெறுப்பு தாக்குதல் அதிகரிப்பு; இந்திய மாணவர்களுக்கு ஒன்றிய அரசு எச்சரிக்கை: தூதரகத்தில் பதிவு செய்ய அறிவுரை

புதுடெல்லி: ‘கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான இனவாத, வெறுப்புணர்வு தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அங்கு செல்லும்  மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,’ என ஒன்றிய அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக  ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள  செய்திக் குறிப்பு வருமாறு: கனடாவில் வெறுப்புத் தாக்குதல்கள், பிரிவினைவாத வன்முறைகள், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இது தொடர்பாக விசாரித்து உரிமை நடவடிக்கை எடுக்கும்படி கனடா அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், குற்றவாளிகள் இதுவரை நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. இந்த தாக்குதல்களை கருத்தில் கொண்டு, கனடா செல்லும் இந்திய மக்களும், மாணவர்களும்  கவனத்துடன் இருக்க வேண்டும். ஏற்கனவே அங்கே வாழும் இந்திய மாணவர்களும், இந்தியர்களும் விழிப்புடன் இருப்பது அவசியம்.

அங்குள்ள இந்தியர்கள் ஒட்டாவா, டொரன்டோ, வான்கூவரில் உள்ள இந்திய தூதரகங்களிலோ அல்லது madad.gov.in என்ற இணையதளத்திலோ பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இதேபோல், துாதரகங்களில் பதிவு செய்வதன் மூலம், இந்தியர்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உடனடியாக உதவி அளிப்பதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: