பீர் பாட்டிலை உடைத்து காவலருக்கு கொலை மிரட்டல்: போதை ஆசாமிகள் 3 பேர் கைது

அண்ணாநகர்: சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் உள்ள அம்மா உணவக கட்டிடத்தின் மாடியில், தினமும் இரவு நேரங்களில் 5 பேர் கஞ்சா புகைப்பது மற்றும் மது அருந்தியவாறு ஆபாசமாக பேசி கலாட்டாவில் ஈடுபடுவதாக அக்கம் பக்கத்தினர் டி.பி சத்திரம் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆய்வாளர் சக்தி வேலாயுதம் தலைமையில்,  காவலர் செந்தில்குமார், அய்யனார், இளையராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, அந்த போதை ஆசாமிகளை பிடிக்க முயன்றனர். அப்போது,போதையில் இருந்த அவர்கள், பீர் பாட்டிலை உடைத்து குத்தி விடுவதாக, கொலை மிரட்டல் விடுத்து தப்ப முயன்றனர்.  அவர்களை விரட்டி சென்று, 3 பேரை மடக்கி பிடித்தனர்.

மற்ற 2 பேர் தப்பி சென்றனர். பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தியதில்,  டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (19) கவிலன் (20)  ரித்திக் (18) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது, பயங்கர ஆயுதங்களுடன் பயமுறுத்துவது   (பிரிவு 147, 148),   ஆபாசமாக பேசுதல் (294),  அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுப்பது (353),  கொலை மிரட்டல் விடுப்பது (506)  ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சைதாப்பேட்டை சிறையில் அடைத்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: