மூலகொத்தலம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

தண்டையார்பேட்டை: ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலகொத்தலம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணிகளை‌ அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னையில் மழைநீர் கால்வாய்கள், நீர்நிலைகள், நீர்வழிக் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 53வது வார்டுக்கு உட்பட்ட மூலகொத்தலம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி, நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் ஆணையர் சிவ்தாஸ் மீனா, அரசு முதன்மை செயலாளர் மணிவாசன் அரசு முதன்மை செயலாளர் ஆணையர் ககன்தீப் சிங்பேடி, மண்டல துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லேஷ் குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்து, ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணி மற்றும் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினர்.

ஆய்வின்போது, மண்டலம் குழு தலைவர் ராமுலு, 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் வேளாங்கண்ணி, மேற்கு பகுதி செயலாளர் வ.பெ.சுரேஷ், பகுதி வட்ட செயலாளர் கவுரீஸ்வரன், மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்.

Related Stories: