×

37 ஆர்.சி. புத்தக ஸ்மார்ட் கார்டுகள் மாயமான விவகாரம்; தாம்பரம் ஆர்டிஓ அதிரடி சஸ்பெண்ட்: புதிய ஆர்டிஓ நியமனம்

தாம்பரம்: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து 37 ஆர்சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் மாயமான விவகாரத்தில் ஆர்டிஓ அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய ஆர்டிஓ நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு தாம்பரம் - தர்காஸ் பிரதான சாலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. சுமார் 460க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகள், 300க்கும் மேற்பட்ட கல்லூரி பேருந்துகள், 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பேருந்துகள் இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இங்கு தினமும் 80க்கும் மேற்பட்ட புதிய இருசக்கர வாகனங்கள், 50க்கும் மேற்பட்ட புதிய நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யவும், 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் எப்சி செய்வதற்காகவும் வருகின்றன.

அதுமட்டுமின்றி தினசரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெறவும், வாகன ஆர்சி புத்தகங்கள் பெறவும் வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி இந்த அலுவலகத்தின் மேல் தளத்தில் உள்ள அறையில் இருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் 37 ஆர்சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் திடீரென மாயமானது. இதுபற்றி அறிந்த தென்சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெய்சங்கர், கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த ஆவின்போது ஆர்சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம்தேதி போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் ஐஏஎஸ் மற்றும் தென்சென்னை போக்குவரத்து இணை ஆணையர் ஜெய்சங்கர் ஆகியோர் காலை முதல், இரவு வரை தாம்பரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர். பின்னர், அலட்சியமாக செயல்பட்டதாக கூறி வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், அலுவலக கண்காணிப்பாளர்கள் பாலாஜி, லட்சுமிகாந்த் காளத்தி, இளம் உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.

இந்த, சம்பவம் தொடர்பாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட கண்காணிப்பாளர் பாலாஜி கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம்தேதி மாலை குடிபோதையில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அலுவலக நுழைவாயிலில் இருந்த சிறிய கதவை காலால் எட்டி உதைத்து, உடைத்தார். பின்னர், ஆக்ரோஷமாக வெளியே வந்து அலுவலகத்தின் பின்புறத்தில் இருந்த கட்டையை எடுத்து வந்து கண்காணிப்பு கேமராவை தாக்கி சேதப்படுத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாகவும், வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 37 ஆர்சி புத்தக ஸ்மார்ட் கார்டுகள் மாயமான விவகாரத்தில் கடந்த 20ம் தேதி தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான, அறிவிப்பை போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், வேலூரில் இருந்து செந்தில்வேலன் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் திங்கட்கிழமை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : R.C. Book ,Thambaram ,RTO , 37 R.C. Book smart cards are a mystical affair; Thambaram RTO Action Suspended: New RTO Appointed
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட...