ரயிலில் பட்டாக்கத்தியுடன் ரகளை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

பெரம்பூர்: புறநகர் மின்சார ரயிலில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், தினமும் பஸ், ரயில்களில் கல்லூரிக்கு வருகின்றனர். இவ்வாறு வருகிறபோது தாங்கள் படிக்கும் கல்லூரிதான் கெத்து என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வகையில், தேவையில்லாத ரகளை மற்றும் பிரச்னையில் மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பேருந்துகளில் ரூட் தல பிரச்னை தொடங்கி தற்போது ரயில்களிலும் பயணிகளுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் 2 கல்லூரி மாணவர்கள், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கற்களால் சரமாரியாக தாக்கிக்கொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது, இது சம்பந்தமாக கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் ரயிலில் நேற்று முன்தினம் கல்லூரி மாணவர்கள் சிலர் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கூட்டமாக ஏறியுள்ளனர். பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு செல்லும்போது லோகோ கேரேஜ், வில்லிவாக்கம், கொரட்டூர் என்று ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் வண்டி நின்றபோது ரயிலில் தொங்கியபடி பட்டா கத்தியை வைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

மேலும், பட்டா கத்தியை பிளாட்பாரத்தில் தேய்த்து தீப்பொறி ஏற்படுத்தியதுடன், பட்டா கத்தியை காட்டி பயணிகளை அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இந்த காட்சிகளை அங்கிருந்து சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இதுபற்றி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ., வரலாறு 2ம் ஆண்டு பயிலும் திருவாலங்காட்டை சேர்ந்த தனுஷ் (18) மற்றும் பி.ஏ.வரலாறு முதலாமாண்டு பயிலும் பூண்டி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மதன் (17) ஆகிய 2 பேர் மின்சார ரயிலில் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டது தெரிந்தது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: