×

மாணவியை கேலி செய்த விவகாரம் கல்லூரி வாசலில் மாணவர்கள் திடீர் அடிதடி: அலறியடித்து ஓடி வந்த ஆசிரியர்கள்; புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை அரசு கலை கல்லூரி மாணவியை கேலி செய்த விவகாரத்தில், சக மாணவனை கல்லூரி வாசலில் சக மாணவர்கள் சரமாரியாக தாக்கினர். இதை கேள்விப்பட்ட ஆசிரியர்கள் ஓடி வந்ததால் மாணவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு 1800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தற்போது, முதலாமாண்டு சேர்க்கை நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாணவ, மாணவிகள் கல்லூரி முடிந்து வீடு திரும்பும்போது கல்லூரி வாசலிலேயே ஒரு மாணவனை அதே கல்லூரியை சேர்ந்த சீனியர் மாணவர்கள் 3 பேர் சரமாரியாக தாக்கினர். அங்கு நின்ற சில மாணவிகள், மாணவனை தாக்கியவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

இதை கேள்விப்பட்டதும் கல்லூரியில் இருந்த ஆசிரியர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் 3 மாணவர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற மாணவர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டனர். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்களிடம் விசாரித்ததில், அந்த சண்டைக்கு மாணவி ஒருவரை அதே கல்லூரியில் பயிலும் மாணவன் கேலி செய்ததே காரணம் என தெரிய வந்தது. இதே கல்லூரியை சேர்ந்த முதலாமாண்டு மாணவி ஒருவர் வேப்பேரியில் உள்ள விடுதியில் தங்கி உள்ளார். அவர், பேருந்தில் கல்லூரிக்கு செல்லும்போது அந்த கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவன் கேலி செய்துள்ளார்.

ஆனால், இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பது தெரியாமல் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கேலி செய்த மாணவனும் தான் பயிலும் கல்லூரியிலேயே படித்து வருவது அந்த மாணவிக்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தன்னுடைய சகோதரியிடம் அந்த மாணவி கூறியுள்ளார். உடனே, அவர் நேற்று கல்லூரிக்கு வந்து சம்பந்தப்பட்ட மாணவனிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது அவருக்கு ஆதரவாக சக மாணவர்கள் அந்த மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர் என்பது தெரிய வந்தது. மோதல் தொடர்பாக, யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்காததால் போலீசார் மாணவர்களிடம் இதுபோன்ற ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மாணவர்கள் மோதல் சம்பவம் வீடியோவில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கல்லூரி மாணவர்களுக்குள் இதுபோன்று அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. கல்லூரி நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.


Tags : Puduvannarapettai , The matter of making fun of the student, the students suddenly stampeded at the college door: the teachers came running screaming; There is excitement in Puduvannarapettai
× RELATED மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட...