×

எங்கிருந்தும் எந்நேரத்திலும் திட்டத்தின் கீழ் இணையத்தில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பட்டா மாறுதலுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்கும் வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், துறையின் செயலாளர் குமார் ஜெயந்த், நிலஅளவை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வருவாய்த்துறை பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான பல்வேறு ஆவணங்கள், பட்டா, சிட்டா, அடங்கல், சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்ற பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், வருவாய்த் துறை பணிகளை கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

தற்போது, பொதுமக்களின் வசதிக்காக எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் பட்டா மாறுதல் கோரி https://tamilnilam.tn.gov.in என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் பட்டா உத்தரவின் நகல், பட்டா, புலப்படச்சுவடி ஆகியவற்றை ‘எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், பொதுசேவை மையங்களுக்கு செல்வதும், வட்ட அலுவலகங்களில் இடைத்தரகர்களால் அவதிப்படுவதும் தவிர்க்கப்படும்.

அதேபோல், கணினிப்படுத்தப்பட்ட பிளாக் வரைபடங்களை, தனித்தனி நகரப் புலங்களுக்கான வரைபடங்களாக https://eservices.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளும் இப்புதிய வசதி மூலமாக, பொதுமக்கள் நகர்ப்புர நிலவரைபடங்களை இணையவழியில் கட்டணமின்றி பெறலாம்.  மேலும், இவ்வரைபடம், மனை அங்கீகாரம் மற்றும் வங்கிக் கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குவதுடன், பொதுமக்கள், நகரநிலவரைபடம் பெரும்பொருட்டு வட்டாட்சியர் அலுவலகம் வருவது தவிர்க்கப்படும்.

Tags : Chief Minister ,M.K.Stalin. , Facility to apply for change of belt online under the scheme Anywhere Anytime: Launched by Chief Minister M.K.Stalin
× RELATED தேசிய குடிமை பணியாளர்கள் நாள் முதல்வர் வாழ்த்து