கட்டிலில் கட்டிப்போட்டு கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற வியாபாரி: வேலூரில் பயங்கரம்

வேலூர்: வேலூரில் கள்ளக்காதலியை கட்டிலில் கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி பாத்திர வியாபாரி எரித்து கொன்றார். வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று காலை கதவை திறந்துகொண்டு நடுத்தர வயதுடைய ஒருவர் தீயில் எரிந்தபடி வெளியில் வந்து அங்குள்ள கழிவுநீர் கால்வாயில் குதித்தார். அவரை மீட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரத்தில் வீட்டின் உட்பகுதியில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. உடனே வீட்டுக்குள் நுழைந்து பார்த்த அப்பகுதி மக்கள், கட்டிலில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் தீயில் எரிந்தபடி கிடந்ததை பார்த்தனர். மேலும் கட்டிலின் அருகில் அப்பெண்ணும், ஆட்டோவில் அனுப்பி வைக்கப்பட்டவரும் உல்லாசமாக இருந்த போட்டோக்கள் சிதறி கிடந்துள்ளதையும் பார்த்தனர்.

உடனே அப்பெண்ணை மீட்ட பொதுமக்கள் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே வேலூர் கோட்டை அகழியில் பலத்த தீக்காயங்களுடன் ஓடி வந்த நடுத்தர வயதுடைய ஆண் ஒருவர் குதித்ததை பார்த்தவர்கள் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முள்ளிப்பாளையத்தில் தீக்காயங்களுடன் ஆட்டோவில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நடத்திய விசாரணையில், தீயில் எரிந்த பெண்ணின் பெயர் திலகவதி(38) என்பதும், தீக்காயங்களுடன் அகழியில் குதித்த போது, மீட்கப்பட்டவர் ரமேஷ்(35) என்பதும் தெரிய வந்தது. திலகவதியும், ரமேஷூம் குடியாத்தத்தில் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள். திலகவதியின் கணவர் கோபிநாத் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். ரமேஷ் இருசக்கர வாகனத்தில் பாத்திரம் மற்றும் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். ஒரே பகுதி என்பதால் திலகவதிக்கும், ரமேஷூக்கும் தொடர்பு ஏற்பட்டு, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் வெளியில் தெரிய வந்ததால், இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்துள்ளனர். அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து ஓரிரு நாட்கள் ‘ஜாலி’யாக இருந்து விட்டு செல்வதும் தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் இவர்கள் இருவரும் இங்கு வந்து தங்கியுள்ளனர். காலையில் அவர்கள் உல்லாசமாக இருந்தபோது எடுத்த போட்டோக்களை ரமேஷ் காட்டியிருக்கலாம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு எழுந்திருக்கலாம். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரமேஷ், திலகவதியின் மீது, தான் தயாராக வாங்கி வந்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருக்கலாம். அப்போது அவரது உடலிலும் தீப்பற்றியிருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆபத்தான நிலையில் உள்ள திலகவதியிடம் இருந்து மாஜிஸ்திரேட் மரண வாக்குமூலம் பெற்றார். இந்நிலையில் நேற்றிரவு திலகவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: