×

போலி பாஸ்போர்ட் வழங்கிய வழக்கு அதிகாரிகள் மீது வழக்குப் பதிய ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை: ஐகோர்ட் கிளையில் கியூ பிரிவு தகவல்

மதுரை: பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை என ஐகோர்ட் கிளையில் கியூ பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை, வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த முருககணேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கியது தொடர்பான வழக்கில், விசாரணையை முடித்து 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டுமென கடந்தாண்டு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. தற்போது வரை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத க்யூ பிரிவு போலீசார் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, ‘‘சம்பந்தப்பட்ட வழக்கில் முதல் நிலை குற்றப்பத்திரிகை மதுரை ஜேஎம் 4 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் 14 பேர், 2 தபால்துறை அலுவலர்கள், காவல் துறையைச் சேர்ந்த 5 பேர், பாஸ்போர்ட் பெற்ற 7 பேர், பயண முகவர்கள் 13 பேர் உள்ளிட்ட 41 பேருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மீது பாஸ்போர்ட் சட்டத்தின் கீழும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழும் குற்றச்சாட்டு உள்ளது.

போலீஸ்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் கீழ் பணியிலுள்ள 16 பேரில் ஒருவர் மீது மட்டுமே இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது. மற்றவர்கள் மீது வழக்கு பதிய அனுமதி தராமல் நிராகரித்து விட்டது. இதை எதிர்த்து மீண்டும் ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டு நிலுவையில் உள்ளது. அனுமதி கிடைத்ததும் விசாரணை முடித்து முழுமையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’’ என்றார். இதையடுத்து வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Tags : Union Govt ,iCourt , Union Govt not allowed to file case against officials for issuing fake passports: Q Division information in iCourt branch
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...