சோனியா, ராகுல் ஆதரவுடன் காங். தலைவர் பதவிக்கு கெலாட் போட்டி: சசி தரூர் உள்பட மேலும் சிலர் களமிறங்க தீவிரம்; வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

கொச்சி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிடாதது உறுதியான நிலையில், சோனியா, ராகுல் ஆதரவுடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தேர்தலில் களமிறங்குவதை உறுதி செய்துள்ளார். அவரை எதிர்த்து சசிதரூர் உள்பட மேலும் சிலர் போட்டியிட உள்ளனர். இந்த பரபரப்பான சூழலில், வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்க உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 19ம் தேதி முடிவு அறிவிக்கப்படும்.

இத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து மவுனம் காத்து வந்தார். ராகுல் போட்டியிடாத பட்சத்தில், தலைவர் பதவிக்கு போட்டியிட தயார் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறி இருந்தார். இதே போல, திருவனந்தபுரம் எம்பியும், கட்சி தலைமை குறித்து விமர்சித்த ஜி23 தலைவர்களில் ஒருவருமான சசிதரூர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் அவர் சமீபத்தில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், கடைசி முறையாக ராகுலை சமாதானப்படுத்த கெலாட் கொச்சிக்கு சென்றார். இந்த கடைசி கட்ட முயற்சியும் தோல்வி அடைந்தது. ராகுல் மீண்டும் கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க தயாராக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொச்சியில் நேற்று பேட்டி அளித்த அசோக் கெலாட், ‘‘காந்தி குடும்பத்தில் இருந்து யாரும், கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே நான் போட்டியிட முடிவு செய்துள்ளேன். ராஜஸ்தான் சென்ற பிறகு எப்போது வேட்புமனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும். என்னைப் போல எனது காங்கிரஸ் நண்பர்கள் பலரும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். யார் போட்டியிட்டாலும் அதைப் பற்றி கவலையில்லை.

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்துவோம். மாவட்ட, மாநில அளவில் கட்சியை ஒருங்கிணைத்து முன்னோக்கி கொண்டு சென்று வலுவான எதிர்க்கட்சியாக்க வேண்டும் என்பது அவசியம். நாட்டின் தற்போதைய சூழலில், வலுவான எதிர்க்கட்சி தேவை,’’ என்றார்.

இதன் மூலம் சோனியா, ராகுல் ஆதரவுடன் கெலாட் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், வேட்புமனு தாக்கல் செய்வது, வாக்காளர் பட்டியல் தொடர்பாக சசிதரூர் ஏற்கனவே கட்சியின் மத்திய தேர்தல் ஆணையர் மதுசூதன் மிஸ்திரியை நேரில் சந்தித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்துள்ளார். எனவே, தற்போதைய நிலையில், கெலாட், சசிதரூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. இவர்களைத் தவிர மூத்த தலைவர்கள் பலரும் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பரபரப்பான சூழலில், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

* அடுத்த முதல்வர் யார்?

கொச்சியிலிருந்து ராஜஸ்தானுக்கு நேற்று புறப்பட்ட கெலாட், ஷீரடிக்கு சென்று சாய்பாபா கோயிலில் வழிபட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி கொள்கை’ குறித்தும், ராஜஸ்தானின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்தும் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு கெலாட், ‘‘இது தேவையில்லாத விவாதம். நான் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை என நீங்கள் நினைத்தால் அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி கட்சித் தலைவர் சோனியாவும், ராஜஸ்தானுக்கான பொறுப்பாளரும் பொதுச் செயலாளருமான அஜய் மக்கான் ஆகியோர் முடிவு செய்வார்கள்’’ என்றார்.

* ‘மன்மோகன் போல…’

காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து பாஜவின் தேசிய செய்தித் தொடர்பாளர் செஷாத் பொன்னவல்லா அளித்த பேட்டியில், ‘‘காங்கிரசுக்கு அடுத்த தலைவராக யார் வந்தாலும், ராகுல்தான் கட்சியின் முதன்மை இடத்தில் இருப்பார் என சமீபத்தில் ப.சிதம்பரம் கூறினார். எனவே, அடுத்த தலைவர், சோனியாவால் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்பட்ட மன்மோகன் சிங் போலத்தான் இருப்பார்,’’ என்றார்.

வேட்பாளர்கள் பற்றி பேச தடை

* காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான கவுரவ் வல்லபா தனது டிவிட்டரில், கட்சி தலைவர் தேர்தல் தொடர்பாக கெலாட்டுக்கு ஆதரவாகவும், சசிதரூரை கடுமையாக விமர்சித்தும் சில தினங்களுக்கு முன் பதிவிட்டார். இது கட்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இனி கட்சியின் எந்த செய்தி தொடர்பாளரும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்குமாறு கட்சி மேலிடம் தகவல் அனுப்பி உள்ளது.

* காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கெலாட், சசிதரூர் தவிர முன்னாள் ஒன்றிய அமைச்சர் மணிஷ் திவாரி, முன்னாள் மபி முதல்வர் கமல்நாத், திக் விஜய் சிங், முகுல் வாஸ்னிக், பிரித்விராஜ் சவான் உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், திக்விஜய் சிங் தனக்கு போட்டியிட விருப்பமில்லை என நேற்று தெரிவித்தார்.

Related Stories: