×

கொடநாடு கொலை, கொள்ளைக்கு முன்பும், பின்பும் 100க்கும் மேற்பட்டோரிடம் பேசிய ஜெயலலிதாவின் மாஜி டிரைவர் கனகராஜ்: அரசு வழக்கறிஞர் தகவல்

ஊட்டி:  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தது. இதில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் ஈடுபட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். சம்பவம் நடந்த சில நாட்களில் சேலத்தில் நடந்த விபத்தில் மர்மமான முறையில் கனகராஜ் உயிரிழந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இவ்வழக்கில் மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

சயான், வாளையார் மனோஜ் உட்பட 4 பேர் ஆஜராகினர். அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆஜராகினர். வழக்கு விசாரணைக்கு கூடுதல் கால அவகாசம் கேட்கப்பட்டதை தொடர்ந்து வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.  அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், ‘‘கொடநாடு கொலை வழக்கில் இதுவரை 316 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேலம் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜ் 13 சிம் கார்டுகள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

அதில் 6 சிம் கார்டுகள் கனகராஜ் பெயரில் இருந்துள்ளது. கொடநாடு சம்பவம் நடைபெறுவதற்கு முன்பும், சம்பவத்திற்கு பின்பும் கனராஜ் சுமார் 100 பேரிடம் பேசியுள்ளார். அந்த நபர்கள் யார் யார்? என்று விரிவாக விசாரணை நடத்த வேண்டி உள்ளது. 516 தகவல் பரிமாற்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொலைதொடர்பு நிறுவனங்களிடம் கூடுதல் தகவல்கள் சேகரிக்க வேண்டி உள்ளது. எனவே விசாரணை மேற்கொள்ள அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை அக்டோபர் மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்’’ என்றார்.

Tags : Jayalalithah ,Maji Driver Kanakaraj , Jayalalithaa's ex-driver Kanagaraj spoke to more than 100 people before and after Koda Nadu murder, robbery: Public prosecutor information
× RELATED ஜெயலலிதா ஆட்சியில் வாச்சாத்தி கிராம...