×

எஸ்டிபிஐ - பாப்புலர் ஃப்ரன்ட் மீதான ஒடுக்குமுறை!: அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது..விசிக தலைவர் தொல் திருமா. கண்டனம்..!!

சென்னை: எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் மீதான ஒடுக்குமுறைக்கு விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்தியில், தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள், அலுவலகங்களில் நுழைந்து அவர்களை துன்புறுத்தியும், அச்சுறுத்தியும் சனாதன பாஜக அரசு ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

இத்தகைய இஸ்லாமிய விரோதப் போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. சனநாயக வழியில் வெளிப்படையாக இயங்கும் ஒரு வெகுமக்கள் இயக்கம்தான் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் ஆகும். இவ்வியக்கங்களின் தலைமை பொறுப்பில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இடம் பெற்றிருந்தாலும், இந்துக்கள் உள்ளிட்ட பிற மதங்களை சாந்தவர்களும் தலைமைத்துவப் பொறுப்புகளை வகிக்கின்றனர். அதேபோல, இவ்வியக்கங்களை இஸ்லாமியர்கள் நலன்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களின் நலன்களுக்காக பாடுபடுகிற மையநீரோட்ட அமைப்புகளே ஆகும்.

தொடர்ந்து பாஜக ஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்து இவ்விரு இயக்கங்களையும் குறிவைத்து, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக முத்திரை குத்தி வெகுமக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அகில இந்திய அளவில் கட்டுக்கோப்புடனும் கருத்தியல் வலுவுடனும் அனைத்து தரப்பு மக்களையும் அணிதிரட்டி வருவதால், இவ்வியக்கங்கள் ஒரு மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்துவிட கூடாதென்னும் உள்நோக்கத்தில் தான் பாஜக அரசு, இவ்வாறு இவ்வியங்களை நசுக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

அண்மையில் நடந்த பரிசோதனையில் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு சனநாயக சக்திகளுக்கும் எதிரானவையாகும். எனவே, இவ்வாறான சிறுபான்மையின வெறுப்பு அரசியலை சனாதன சங்பரிவார் அரசு கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : STBI , STBI - Popular Front, Sananayak Shakti, Thol Thiruma.
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்