×

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக்க யாரும் துணைபோகவேண்டாம்: கி.வீரமணி வேண்டுகோள்

சென்னை: அன்று: பாபர் மசூதியை இடிக்க அம்பேத்கர் பிறந்த நாளை தேர்ந்தெடுத்தனர்; இன்று: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திட காந்தியார் பிறந்த நாளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.  உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது நியாயந்தானா? அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை  அமளிக்காடாக்க யாரும் துணைபோகவேண்டாம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு என்பதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், அதனை ஒரு சாக்காகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் காலூன்றிட திட்டமிட்டு குறி வைத்துச் செயல்படுகின்றது.

குறுக்குசால் ஓட்டும் விஷம வேலைகள் தமிழ்நாட்டில், மக்களின் பெருவாரியான ஆதரவுடன் அமைந்துள்ள தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட, குறுக்குசால் ஓட்டும் விஷம வேலைகளை - சில ஊடகங்கள், விபீடணர்கள், கூலிப் படைகள், கிரிமினல் பேர்வழிகளின் துணையோடு - திட்டமிட்டே கலவரங்களை - வட மாநிலங்களில் உருவாக்குவதுபோல நடத்திட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன. வீண் வம்புகளை வலிய இழுத்து, சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்தது என்ற பழிபோட திட்டமிட்டு செயலாற்றுகின்றன. கட்சியைக் காப்பாற்ற மறந்து, தங்களைக் காப்பாற்றிடவே, முயலுகின்றனர்.

இல்லாவிட்டால், நீதிமன்ற வாசலில் ‘தவம்‘ கிடக்கும் பரிதாபத்திற்குரிய முக்கிய எதிர்க்கட்சி, அதன் முந்தைய தலைவர்களின் கொள்கை - நிலைப்பாட்டினையும் மறந்துவிட்டு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக ஆட்சிமூலம் பதவிக்கு வர எண்ணாமல், இராமன் உதவியைத் தேடி, வாலியை ஒழிக்கச் சென்ற சுக்ரீவன் கதைபோல, டில்லிக்குப் படையெடுத்து ‘சரணம் சரணம்பாடி’ தமது கட்சியைக் காப்பாற்ற மறந்து, தங்களைக் காப்பாற்றிடவே, முயலுகின்றனர். அதில் ஒரு ‘பரமபத ஏணி’யைப் பிடித்த இடைக்காலப் பொதுச்செயலாளர், ‘‘2024-லேயே தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் வரும்‘’ என்று கூறுகிறார் என்றால், அதற்குப் பொருள் என்ன?

பா.ஜ.க., அ.தி.மு.க. அணிகள் திட்டமிட்டு தி.மு.க. ஆட்சிக்கு எதிராகக் கலவரங்களை ஏற்படுத்தி, திட்டமிட்ட வன்முறைகளை வலிய வரவழைத்து, தங்களது சூழ்ச்சித் திட்டத்தை அரங்கேற்ற முயலுகின்றனர் என்பதே. மற்ற மாநிலங்களைப்போல இங்கே ‘குதிரை பேரங்கள்’ வெற்றியடைய முடியாது. எனவே, ஆளுநர் மாளிகையின் ஒத்துழையாமை, அரசமைப்புச் சட்ட நெறிமுறை தவறுதல், தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து, சட்டமன்ற மசோதாக்கள்மீது முடிவு எடுக்காமல், தமிழ்நாட்டில் ஆட்சியை  முறையாக செயல்படுதலைத் தடுக்கும் அரசமைப்புச் சட்ட முரண்களைச் செய்தும் வித்தைகளைக் காட்டுகின்றனர்.

மற்றொருபுறத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் புகழ் திசையெட்டும் பரவி, இவர்களைத் திக்குமுக்காடச் செய்கிறது. விழி பிதுங்கி கைபிசைந்து காவிகளும், ‘ஆவி’ தொழுவோரும் நிற்கின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்கிட ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள்மூலம் அச்சாரமிடத் திட்டமிடுகின்றனர். பெரியார் மண் இது, மறவாதீர். அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக்கி ஆட்சியைப் பிடிக்கும் கனவு வீண் கனவாகும் - ‘‘விதைத்த அழுகல் நெல் முளைக்காது, கட்டாந்தரையில் தாமரை ஒருபோதும்  முளைக்காது’’. அக்டோபர் 2 ஆம் தேதி - காந்தியார் பிறந்த நாள் அன்று ஆர்.எஸ்.எஸ்.  அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலமாம். அந்த நாளை அவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் தெரியுமா?

காந்தியாரைச் சுட்டுக் கொன்ற கோட்சே என்ற மராத்தி சித்பவன் பார்ப்பனர், ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி எடுத்த பிறகே, ஹிந்து மகாசபைக்குச் சென்றவர் என்பதை எவரே மறுக்க முடியும். அவரும், அவர் தம்பியும்கூட எழுத்து மூலத்தில் கூறியுள்ளார்களே. அந்நாளில் ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் ஊர்வலம் நடத்திட, அனுமதியளிக்க உயர்நீதிமன்றம் கட்டளையிட்டு இருப்பது நியாயந்தானா?
அந்த நாளில் ஊராட்சி, பஞ்சாயத்துகளில் ஊர் சபைக் கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் நாளல்லவா? காந்தியார் பிறந்த நாளை, காங்கிரஸ் கட்சி, காந்தி தொண்டர்களும் பட ஊர்வலம் நடத்திக் கொண்டாடுவார்களே, அந்த நாளைத்தான் ஆர்.எஸ்.எஸ். தேர்ந்தெடுப்பானேன்?

அம்பேத்கர் பிறந்த நாளான டிசம்பர் 6 ஆம் தேதியை தேர்வு செய்து - பாபர் மசூதி இடிக்க திட்டமிட்டே அவர்கள் சன்னமான விஷம வேலைகளில் ஈடுபட்டனர். இதுபற்றி தமிழ்நாடு அரசும், ஏன் உயர்நீதிமன்றமும்கூட காந்தியார் பிறந்த நாள் என்பதை நினைவில் வைத்து, தங்கள் முடிவை மீண்டும் சீராய்வு செய்யவேண்டும்.
அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை அமளிக்காடாக்கத் தெரிந்தோ, தெரியாமலோ யாரும் துணை போகவேண்டாம். மதவெறி மாய்த்த - மனிதநேயம் என்றும் தழைக்கும் மண்ணாக தமிழ்நாட்டை பாதுகாப்பது, தமிழ்நாட்டு மக்களின் முக்கிய கடமை - கட்சி உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாகும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Tamil Nadu ,K. Veeramani , Peace Park, Tamil Nadu, Amali, Vendam, K. Veeramani
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...