பரம்பிக்குளம் அணை: நீர்மட்டம் 40 அடியாக குறைந்தால் மட்டுமே பராமரிப்பு தொடங்கும்; அதிகாரிகள் தகவல்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே தமிழ்நாடு, கேரளா எல்லையில் உள்ள பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்ததால் 3-வது நாளாக தண்ணீர் வெளியேறி வருகிறது. கோவை திருப்பூர் மாவட்டங்களில் பாசன மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பரம்பிக்குளம் அணை 72 அடி உயரம் கொண்டது. 17 TMC நீரை தேக்கிவைக்கும் கொள்ளளவை கொண்ட அணை அண்மையில் பெய்த தென்மேற்கு பருவ மழையால் முழுமையாக நிரம்பியது. இந்நிலையில், 3 மதகுகள் கொண்ட நடு மதகில் உடைப்பு ஏற்பட்டவே மூன்றாவது நாளாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி அரபிக்கடலில் கலக்கிறது.

இதனால், வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேறி வருவதால் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 61 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 40 அடியாக குறைந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என்பதால், முதற்கட்டமாக அணை மதகு மற்றும் சேதமடைந்த பாகங்களை சீரமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. பின்னர், அரசிடம் இருந்து நிதி பெற்று புதிய மதகு பொருத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, சென்னையில் இருந்து 5 பேர் கொண்ட அணை கட்டுமான நிபுணர் குழு 2 நாட்களாக முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் சில தொழில் நுட்ப பிரிவு நிபுணர்கள் சென்னையில் இருந்து செல்ல உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Related Stories: