×

விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு உறைவிட கட்டிடத்தில் இயங்கும் காசநோய் பிரிவு-நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் தங்க இடமின்றி அவதி

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நோயாளிகளின் உடன் வருவோர் தங்குவதற்கு கட்டப்பட்ட சிறப்பு உறைவிட அறையில் காசநோய் பிரிவு இயங்குவதால், நோயாளிகளின் உறவினர்கள் தங்க இடமின்றி மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் தங்கி அவதிப்படுகின்றனர்.

விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலானது. இங்கு 176 டாக்டர்கள், 220 செவிலியர்கள், லேப் டெக்னிசியன், மருந்தாளுனர்கள் மற்றும் பிறதுறை பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 320க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். செவிலியர் பயிற்சி பள்ளி மாணவியர் 350 பேர் பயிற்சியில் உள்ளனர்.

மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான கட்டிடம் கட்டுவதற்கு ஏற்கனவே இருந்த 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி இன்னும் நிறைவுபெறவில்லை. 7 மாடி கட்டிடத்தில் மார்ச் 2022ல் மருத்துவமனை செயல்பட துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 6 மாதங்கள் கடந்த பின்பும் கட்டுமான பணிகள் நிறைவு பெறவில்லை.
மாவட்டம் முழுவதும் இருந்து சிகிச்சைக்கு வரும் தினசரி நோயாளிகள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து விட்டது. தற்போதுள்ள பழைய கட்டிடங்கள் மற்றும் மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டிடங்களில் உள்நோயளிகளுக்கு சுமார் 670 படுக்கைகள் உள்ளன.

உள்நோயாளிகள் மற்றும் ஐசியு பிரிவுகளில் இருக்கும் நோயாளிகளின் உடன் வரும் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்த சிறப்பு உறைவிட கட்டிடத்தில் தங்கும் வசதிகள் இருந்தது.
இந்த கட்டிடத்தில் தற்போது காசநோய் பிரிவும், பிறப்பு, இறப்பு பதிவு செய்யும் மையமும் செயல்படுகிறது. இதனால், நோயாளிகளின் உடன் வரும் உறவினர்கள் தங்க இடமின்றி உடமைகளுடன் மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளிகளில் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கின்றனர்.சிகிச்சை பெற வரும் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்கு செல்லும் வரை அமர இருக்கை வசதிகள் இல்லை.

அவசர மற்றும் அதிமுக்கியமான ரத்த பரிசோதனை செய்ய மருத்துவர்கள் எழுதி தரும் ரத்த பரிசோதனைகளுக்கான ரசாயனங்கள் இல்லை. மருத்துவர்கள் எழுதி தரும் பல மாத்திரைகள் மருத்துவமனையில் இல்லாததால், நோயாளிகள் வெளியே பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழல் தொடர்கிறது.காது கேட்கும் கருவி தரும் நிறுவனத்திற்கு லட்சக்கணக்கில் பாக்கி இருப்பதால் காது கேட்கும் கருவி சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அம்மா மருந்தகங்கள் முதல் பல நிறுவனங்கள் வரை சப்ளை செய்த மருத்துவ உபகரணங்களுக்கான தொகை வழங்காத காரணத்தால் மருந்து, மாத்திரைகள் அவசர தேவைக்கு வெளியே கொள்முதல் செய்ய முடியாத நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்ட செயலாளர் காளிதாஸ் கூறுகையில், ‘மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்திய பிறகும், தலைமை மருத்துவமனையாகவே செயல்படுகிறது. வைரஸ் காய்ச்சல் பாதித்து வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கூடுதல் மருத்துவர்கள் நியமிக்கப்படவில்லை. வெளிநோயாளிகள் பிரிவில் 4 முதல் 5 மருத்துவர்கள் மட்டும் பணியில் உள்ளனர்.

தேசமக்கள் முன்னேற்ற கழக தேசிய தலைவர் பரத்ராஜா கூறுகையில், ‘உள் நோயாளிகள், ஐசியு சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் உடன் வருவோர் தங்குவதற்கு கட்டிய கட்டிடத்தில் காசநோய் பிரிவு செயல்படுவதால், உடன் வரும் நபர் உடமைகளுடன் தங்க வசதியின்றி சிரமப்படுகின்றனர். முடக்கு வாத சிகிச்சைக்கு மருத்துவர் இல்லை.
ரத்த பரிசோதனைக்களுக்கான ரசாயனம் இல்லாததால் வெளி பரிசோதனை மையங்களில் காசு கொடுத்து பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Virudhunagar Government Medical College Hospital , Virudhunagar: At Virudhunagar Government Medical College Hospital, a special facility has been built for the accommodation of accompanying patients
× RELATED அரசு மருத்துவமனையில் போதை மறுவாழ்வு...