×

தேவிகுளம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்-பொதுமக்கள் அச்சம்

கூடலூர் : தேவிகுளம் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து, மேச்சலுக்கு விட்ட பசுவை கொன்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மூணாறு அருகே பூப்பாறை, பெரியகானல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விவசாய விளைநிலங்களுக்குள் காட்டு யானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் புகுவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சமயங்களில் காட்டு யானை, புலி அங்கு பணிபுரியும் தொழிலாளர்களை தாக்கி விடுகிறது. புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது  தொடர்கதையாக உள்ளது. இதுமட்டுமின்றி, தண்ணீருக்கு பயன்படுத்தப்படும் பைப்,  மோட்டார் உள்ளிட்டவற்றை முற்றிலுமாக சேதப்படுத்தி செல்கின்றது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழைய மூணாறில் தேயிலை  தோட்ட பகுதியில் வேலை பார்த்த ஷீலா ஷாஜி என்ற பெண்ணை புலி தாக்கியது. புலியின்  தாக்குதலில் காயமடைந்த மயங்கி விழுந்த ஷீலாவை, சக ஊழியர்கள் உடனடியாக  மூணாறில் உள்ள டாடா ஹை ரேஞ்சு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண்  தொழிலாளியை புலி தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேவிகுளம் இரைச்சல்பாறையை சேர்ந்தவர் அந்தோணி  பேபி. மேய்ச்சலுக்கு ெசன்ற இவருடைய பசுவை  காணவில்லை . இந்நிலையில் நேற்று தேவிகுளத்தில் வனத்துறை ஆய்வுமாளிகை  அருகே சொக்கநாடு குளமங்கா பிரிவில் தேயிலை செடிக்கு மருந்து தெளிக்கச்  சென்ற தொழிலாளர்கள், அங்கே இறந்த பசுவின் கால்கள் மற்றும் இதர பாகங்கள்  கிடப்பதையும், அதன் அருகே  சிறுத்தையின் கால்தடம் இருப்பதையும் கண்டனர்.  இதுகுறித்து தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

வனத்துறையினர்  சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கை மேற்கொண்டனர். கால்தடைத்தை வைத்து  சிறுத்தையின்  நடமாட்டத்தை உறுதி செய்தனர். எனவே வனத்துறையினர் தலையிட்டு  வனவிலங்குகளை விவசாய நிலங்களுக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும். குறிப்பாக  யானை, புலிகளை குடியிருப்பு பகுதிக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வனத்துறையினர் கூறுகையில்,  தேவிகுளம் குடியிருப்பு பகுதிக்கு சிறுத்தை வருவது இதுவே முதல்முறை.  சிறுத்தை நடமாட்டத்தை கண்டுபிடித்து, கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை  எடுக்கப்படும், என்றனர்.

Tags : Leopard ,Devikulam , Kudalur: Following the movement of leopards in the residential area of Devikulam, the people are scared after killing a cow left for grazing.
× RELATED அரியலூர் செந்துறை அருகே சிறுத்தை...