×

உடுமலை, மடத்துக்குளத்தில் இயற்கை விவசாயத்தில் இருமடங்கு விளைச்சல் தரும் தென்னைகள்-விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை : உடுமலை, மடத்துக்குளம்  பகுதியில் இயற்கை விவசாயத்தின் மூலம் இரு மடங்கு காய் உற்பத்தியாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  உடுமலை, மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் நெட்டை, குட்டை ரக தென்னைகள் அதிகளவு பயிரிட்டுள்ளனர். சமீப காலமாக விளைநிலங்களில்  ரசாயன உரம் பயன்பாட்டின் காரணமாக பல்வேறு பாதிப்படைந்து காய் பிடிப்பு குறைந்துள்ளது. மேலும் அதிக மகசூல் என்ற நோக்கத்தில் அளவுக்கு  அதிகமாக உபயோகப்படுத்தப்படும் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்  மண்ணை மலடாக்கி வருகிறது.

மேலும் ரசாயனங்களின் எச்சங்கள் தேனீ உள்ளிட்ட  நன்மை தரும் பூச்சி இனங்களை மட்டுமல்லாமல் கால்நடைகள் மற்றும்  மனிதர்களையும் படிப்படியாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
தற்போது நமது முன்னோர்கள் கடைபிடித்த பாரம்பரிய இயற்கை விவசாய  முறைக்கு மாறி வருகின்றனர். இந்நிலையிலிருந்து மீள இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது.இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறியதாவது: நீண்ட  காலப் பயிரான தென்னை சாகுபடி எல்லா காலத்திலும் விவசாயிகளுக்கு  கைகொடுக்கிறது. பனைமரத்தைப் போலவே தென்னை மரம் அனைத்தையும் நமக்குத் தருகிற  கற்பகத் தருவாக உள்ளது. தென்னை சார்ந்த இளநீர், தேங்காய், கொப்பரை,  உரிமட்டை, ஓலை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மனிதர்களுக்கு பயன்படுகிறது.

தென்னை சார்ந்த பொருட்களின் தற்போதைய விலை சரிவு தென்னை விவசாயிகளிடையே  லேசான சோர்வை உருவாக்கியுள்ளது. ஆனாலும் மீண்டும் அதிலிருந்து மீண்டு  வருவோம் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு வருகிறோம்.   குறிப்பாக இயற்கை  முறையில் தென்னை விவசாயம் செய்வதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இயற்கை சாகுபடியைப் பொறுத்தவரை கண்டிப்பாக தோட்டத்தில் களைக்கொல்லிகள்  பயன்படுத்தக்கூடாது. அதற்குப் பதிலாக தென்னை மரங்களுக்கிடையில்  தட்டைப்பயறு, காய்கறிகள் போன்றவற்றை சாகுபடி செய்வதன் மூலம் களைகளைக்  கட்டுப்படுத்துவதுடன் கூடுதல் வருவாயும் பெற முடியும்.

மேலும்  ஊடுபயிர் சாகுபடியினால் உருவாகும் பொறி வண்டுகள் உள்ளிட்ட நன்மை தரும்  பூச்சி இனங்கள், வெள்ளை ஈக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு  வகிக்கின்றன. அடுத்தபடியாக தென்னந் தோப்புகளிலிருந்து விற்பனைக்காக கொண்டு  செல்லப்படும் இளநீர், தேங்காய் உள்ளிட்ட பொருட்களைத் தவிர வேறு எந்த  பொருளையும் தோப்பை விட்டு வெளியே கொண்டு போகக்கூடாது. தனக்குத் தேவையான  சக்தியை தன்னிடமிருந்தே உருவாக்கிக்கொள்ளும் தன்மை தென்னை மரத்துக்கு  உண்டு. மரத்திலிருந்து விழக்கூடிய ஓலை, மட்டை, சில்லாட்டை போன்றவற்றை  மரத்தின் அடிப்பாகத்திலேயே போட்டு வைக்க வேண்டும். இது சிறந்த மூடாக்காக  செயல்பட்டு நீர் இழப்பை குறைக்கிறது.

மேலும், மண் புழுக்கள்  உற்பத்திக்கான குளிர்ந்த தட்ப வெப்பம் மற்றும் அதற்கான உணவையும்  இதிலிருந்து பெற முடிகிறது. மாட்டுச்சாணம், சிறுநீர் போன்றவை சிறந்த இயற்கை  உரமாக உள்ளது. ரசாயன உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொள்வதை  விட கண்டிப்பாக இயற்கை முறையில் அதிக மகசூல் ஈட்ட  முடியும். அதுமட்டுமல்லாமல் தேங்காயின் அளவு மற்றும் தேங்காய் பருப்புகளின்  தடிமன் இயற்கை விவசாயத்தின் மூலம் பெருமளவு அதிகரிக்கிறது.

 உதாரணமாக  ரசாயன உரங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் 100 தேங்காய்களிலிருந்து 13  கிலோ கொப்பரை உறுதி செய்ய முடியும் என்ற நிலையில் இயற்கை முறையில்  விளைவிக்கப்பட்ட 100 தேங்காய்களிலிருந்து 17 கிலோ அளவுக்கு கொப்பரை  உற்பத்தி செய்ய முடியும்.தற்போது இயற்கை முறையில் விளைந்த தேங்காய்  உள்ளிட்ட அனைத்து விதமான விளைபொருட்களுக்கு மவுசு கூடியுள்ளது. இயற்கை  முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் அங்கக சான்றுத் துறையில்  விண்ணப்பித்து அங்கக சான்று பெற்று வைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால்  ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள ஒரு சில பெரு நிறுவனங்கள் சான்றுடன் கூடிய  தேங்காய்களை சந்தை விலையைவிட கூடுதலாக 10 சதவீதம் விலைக்கு கொள்முதல்  செய்து கொள்ள தயாராக உள்ளனர்.

இதுபோல இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட  தேங்காய்களிலிருந்து இயற்கை முறையில் கொப்பரை உற்பத்தி செய்து  மரச்செக்குகளின் மூலம் ஆட்டப்படும் தேங்காய் எண்ணெய்க்கு சந்தையில் நல்ல  வரவேற்பு உள்ளது. இதுபோன்ற சாதகமான அம்சங்களை கருத்தில் கொண்டு உடுமலை  பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் படிப்படியாக இயற்கை விவசாயத்துக்கு மாறி  வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

 இது குறித்து உடுமலையை  சேர்ந்த விவசாயி அப்துல்கலாம் கூறுகையில், ‘‘எனது தோப்பில் 380 சிவப்பு  இளநீர் தென்னை மரம் வைத்துள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக இயற்கை விவசாயம்  செய்கிறேன். ஏற்கனவே ரசாயன உரம் பயன்படுத்தியதால் மரம் அதிகளவில்  பாதிக்கப்பட்டது. வெள்ளை ஈ தாக்குதல் இருந்தது. தற்போது இயற்கை உரம்  பயன்படுத்துவதால் மரம் மீண்டும் உயிர்பெற்றது. எந்த வெடிப்பும் இல்லை.  வெள்ளை ஈ தாக்குதலுக்கு வேளாண் பல்கலையில் இருந்து ஒட்டுண்ணி மருந்து வாங்கி வந்து  மாதம் ஒருமுறை மரங்களுக்கு தெளிப்பேன். இதன்மூலம் 90 சதவீதம் பூச்சி கட்டுப்பட்டுவிட்டது.  

ரசாயன உரம் பயன்படுத்தியபோது மூன்றரை வண்டி காய் கிடைத்தது. ஒரு  இளநீரின் எடை 1300 கிராம் இருந்தது. இயற்கை உரம் பயன்படுத்திய பிறகு 6  வண்டி காய் கிடைக்கிறது. ஒரு காயின் எடை 2400 கிராம் உள்ளது. மரங்களுக்கு  13 வயதாகிறது. 11 வருடங்களாக ரசாயன உரம் இட்டேன். எந்த பலனும் இல்லை.  தற்போது இயற்கை உரத்துக்கு மாறிய பிறகுதான் விளைச்சல் அதிகரித்துள்ளது.  செலவை பொருத்தவரை, நம்மாழ்வார் சொன்னபடி ஜீரோ பட்ஜெட் வந்துவிடும். இன்னும் சில ஆண்டுகளில் எந்த உரமும் போடாமல் மண்ணை  வளப்படுத்திவிட்டால்போதும். எல்லா விவசாயிகளும் இதை பயன்படுத்த வேண்டும்’’  என்றார்.

இயற்கை உரம் தயாரிப்பது எப்படி?

இயற்கையாக  கிடைக்கும் பொருட்களைக்கொண்டு விவசாயிகளே இயற்கை உரத்தைத் தயார் செய்து  கொள்ளலாம். அதற்கு தேங்காய் நார்க்கழிவுகள், காளான் விதை, மாட்டுச் சாணம்,  கோழிஎரு, கற்றாழை, சப்பாத்திக்கள்ளி, எருக்கு இலை, சணப்பை, வேப்பம்  புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, பூண்டு, மஞ்சள் தூள், கோமியம், வேப்பம்  புண்ணாக்கு, பூண்டு என 14 விதமான இயற்கை பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.  

அதனை சரியான விகிதத்தில் பெரிய குழியில் போட்டு மாதம் ஒரு முறை நன்றாக  கலக்கி விட வேண்டும். இரண்டு மாதத்துக்கு ஒரு முறை குழிக்கு தண்ணீர்  பாய்ச்ச வேண்டும். இந்த கலவை 6 மாதத்தில் மக்கி சிறந்த இயற்கை உரமாக  மாறிவிடும்.

ஒரு தென்னை மரத்துக்கு ஒரு ஆண்டுக்கு 40 கிலோ முதல் 50 கிலோ  வரையிலான இயற்கை உரமே போதுமானதாகும். இதுதவிர மீன் அமிலம், பஞ்சகவ்யா  உள்ளிட்ட இயற்கைப் பொருட்களை அவரவர் வசதிக்கேற்ப உற்பத்தி செய்து  பயன்படுத்தலாம்.

Tags : Udumalai ,Madathikulam , Udumalai: Farmers are happy as fruit production doubled through organic farming in Udumalai, Madathikulam area.
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...