வைத்த செங்கல் கூட இல்லை!: மதுரை தோப்பூரில் 95% கட்டுமான பணி முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே இருக்கிறது?..சு.வெங்கடேசன் எம்.பி. சாடல்..!!

மதுரை: மதுரை தோப்பூரில் 95 சதவீதம் கட்டுமான பணி முடிந்த எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே இருக்கிறது என எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தோப்பூரில் எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், மாணிக்கம் தாக்கூர் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு கேள்வி எழுப்பியிருக்கின்றனர். எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு ஒதுக்கப்பட்ட திறந்தவெளி இடத்தில் நின்று பதாகைகளை ஏந்தி ஜே.பி.நட்டாவுக்கு அவர்கள் கேள்வி எழுப்பினர். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நேற்று தெரிவித்திருந்தார்.

வைத்த செங்கல் கூட இல்லை: சு.வெங்கடேசன் எம்.பி.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய இடத்தில் வைக்கப்பட்ட செங்கல் கூட இல்லை என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஜக ஆட்சி புல்புல் பறவைகள் மூலம் 95 சதவிகித வேலையை கட்டி முடித்த மதுரை எய்ம்ஸ் கட்டிதத்தை தேடி நானும் மாணிக்கம் தாக்கூரும் போனோம். கீழ்வானம் வரை மதுரை கிழவி  வெற்றிபோட்டு துப்பிய எச்சிலால் சிவந்து கிடந்தது நிலம். உயர்த்தப்பட்ட திட்ட மதிப்பீட்டிற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறும் பணி இன்னும் முடியவில்லை. ஒப்பந்த புள்ளி கோரப்படவில்லை. அப்படியிருக்க பணி முடிந்து பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார் என்று பாஜக தலைவர் கூறுவது அபத்தத்தின் உச்சம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories: