×

கும்பகோணம் - கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்லும் ராட்சத குழாய் உடைந்ததால் பரபரப்பு: நல்வாய்ப்பாக பெரும் உயிரிழப்பு தவிர்ப்பு

கும்பகோணம் : கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ராட்சத குடிநீர் குழாய் பராமரிப்பு பணியின் போது இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. வாண்டையா இருப்பு கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு ராட்சத குழாய்கள் மூலம் நகை மாவட்டத்தில் உள்ள தலைஞாயிறு உள்ளிட்ட 967 கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு கொள்ளிடம் ஆற்றில் திருப்பிவிடப்பட்டது.

இதனால், ஆற்றில் பல இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டதோடு, குடிநீர் குழாய் செல்லும் பாலம் கடந்த 19ம் தேதி இடிந்து விழுந்தது. அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பணியினால் ஏற்பட்ட அதிர்வுகள் காரணமாக ராட்சத குழாய்கள் செல்லும் பாலம் மீண்டும் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. பாலம் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு வந்த குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் அதனை சரிசெய்யும் பணியை தொடங்கியுள்ளனர். மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு பாலத்தை நிறுவு பணி போர்க்கள அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அடுத்த இரு வாரங்களுக்குள் நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் எடுத்து செல்லும் வகையில் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.   


Tags : Kumbakonam ,Kollidam , Kumbakonam, Kollidam, River, Water, Giant, Pipe, Broken, Casualty, Avoidance
× RELATED கும்பகோணம் அரசு மருத்துவமனையில்...